ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளையில் ஜிபிஎஸ் சிப் மூலம் 7 பேர் கும்பல் ஐதராபாத்தில் கைது: 25 கிலோ நகை, 7 துப்பாக்கி, 13 செல்போன் பறிமுதல்

ஓசூர்: ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.96 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை ஜிபிஎஸ் சிப் மூலம் ஐதராபாத்தில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் துப்பாக்கி, கத்தி, அரிவாளுடன் புகுந்த கொள்ளையர் 5 பேர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அமர வைத்தனர். பின்னர் ஊழியர்களை தாக்கி சாவியை வாங்கி திறந்து லாக்கர்களில் இருந்த ரூ.12 கோடி மதிப்பிலான 3,000 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பையில் அள்ளிப்போட்டு கொண்டு டூவீலரில் ஏறி தப்பினர். இந்த சம்பவத்தில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. நகை வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் ஜிபிஎஸ் சிப்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனால், நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் ஆணேக்கல், சந்தாபுரம், கோலார் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொள்ளையர்களை தேடி விரைந்தனர்.

இதனிடையே, கர்நாடகாவில் கொள்ளையர்கள் நகைகளை எடுத்துக்கொண்டு பெட்டிகளை சாலையோரம் வீசி விட்டனர். ஆனாலும் ஜிபிஎஸ் சிப் மூலம் கொள்ளையர் செல்லும் இடம் தெரியவந்தது. அதன் அடிப்படையில் தமிழக போலீசார் தெலங்கானா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில், ஐதராபாத் ரிங்ரோடு பகுதியில் நேற்று அதிகாலை அங்கிருந்த போலீசார் ஷேகிதாபாத் ரிங் ரோடு வழியாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 7 பேர் இருந்தனர். அவர்களிடமிருந்த பைகளை சோதனையிட்டதில், நகைகள், பணம் இருந்தது. பின்னர், 7 பேரையும் கைது செய்து போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரூப் சிங் பாகல் (எ) ரூப் சிங்(22), ஷங்கர் சிங் பாகல்(36), பவன்குமார் விஷ்கர்மா(22), ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்த பூபேந்தர் மன்ஜி(24), மீன் வியாபாரி விவேக் மண்டல்(32), உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த கன்டெய்னர் டிரைவர் டீக் ராம்(55), கிளீனர் ராஜிவ்குமார்(35) என்பது தெரியவந்தது.

இதில் மபியை சேர்ந்த 2வது குற்றவாளியான அமித் என்ற விவேக் சுக்லா தலைமறைவாகி விட்டான். அவனை போலீசார் தேடிவருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள், ரூ.96 ஆயிரம், 7 கைத்துப்பாக்கிகள், 13 செல்போன்கள் மற்றும் கத்தி, அரிவாள், கார், கன்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த அக்டோபரில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த கொள்ளையில் அமித், சங்கர், ரூப் சிங், சுஜீத் சிங் மற்றும் ரோஷன் சிங் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அதில் சுஜீத் சிங், சவுரப், ரோஷன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். மேலும் தற்போது கைதான ரூப் சிங்கும் அமித்தும் பெங்களூருவில் 3 மாதத்திற்கு முன்பு ஸ்போக்கன் இங்கிலிஷ் படித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பண நெருக்கடியால் இந்த கொள்ளையில்் ஈடுபட்டுள்ளனர் என்று தெலங்கானா போலீசார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட நகைகள் உரியவர்களிடம்விரைவில் ஒப்படைப்பு

தனியார் நிதிநிறுவன நிர்வாக இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் பாகலூர்-ஓசூர் ரோடு கிளையில் நிகழ்ந்த கொள்ளையில், ரூ.10 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 7 கொள்ளையர்கள், சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொள்ளையர்கள் திருடிய தங்கம் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க உதவிய தெலங்கானா காவல்துறை, தமிழக காவல்துறை மற்றும் கர்நாடக காவல் துறையினருக்கு நன்றி. மீட்கப்பட்ட நகைகள் விரைவில் திருப்பித் தரப்படும் என்று நம்புகிறோம். இதனால் அந்த நகைகளை அதற்குரிய உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்படைப்போம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையரை பிடித்த காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாடு காவல் துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற கொள்ளையில் திருடு போன ரூ.15 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல் துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

கன்டெய்னர் ரகசிய அறையில்பதுங்கியிருந்த கொள்ளையர்

கொள்ளையர்கள் எடுத்து சென்ற நகைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களால் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் என்பதால், தனியார் நிதி நிறுவனத்தில் அவற்றை கவரில் போட்டு, ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டு இருந்தது. அது கொள்ளையர்களுக்கு தெரியவில்லை. அதை வைத்து போலீசார் கொள்ளையர்கள் எங்கு செல்கிறார்கள் என கண்காணிக்கத் தொடங்கினர். இதில் அவர்கள் தெலங்கானா மாநிலம் நோக்கி தப்பிச் செல்வது தெரியவந்தது. அதை வைத்து அவர்கள் சைபராபாத் பக்கமாக சென்றது கிருஷ்ணகிரி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின்படி ெதலங்கானா போலீசார் ஜிபிஎஸ் சிப் டவர் லோகேசனை பார்த்ததில், அது ஒரு கன்டெய்னர் லாரி மற்றும் டாடா சுமோவை காட்டியது. இதையடுத்து, அந்த கன்டெய்னர் லாரியை போலீசார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அதில் டிரைவரை தவிர யாரும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர சோதனையில் ரகசிய அறை வைத்து அதில் 4 பேரும், பின்னால் வந்த சுமோ காரில் 3 பேரும் இருந்தது தெரிய வந்தது. இப்படித்தான் கொள்ளையரை மடக்கி நகைகளை மீட்டுள்ளனர்.

Related Stories: