செங்கல்பட்டு அருகே பரபரப்பு அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி பயங்கர விபத்து: டிரைவர் பரிதாப பலி; 5 பேர் கவலைக்கிடம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், வடமாநில டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த டிரைவர் சோஹைல் (23) என்பவர், லாரியை ஓட்டி சென்றார். அவருடன் கிளீனர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம் (22) என்பவர் சென்றார். செங்கல்பட்டு மேம்பாலம் அருகே சென்றபோது, எதிரே, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த லாரி மீது, எதிர்பாராத விதமாக, இந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

இதில், சோஹைல், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கிளினீர் ராம் படுகாயமடைந்தார். திருச்சியில் இருந்து வந்த லாரி டிரைவர் மதுராந்தகத்தை சேர்ந்த பாரதி (30), கிளீனர் அரியானாவை சேர்ந்த சோகைல்கான் (22) படுகாயமடைந்தனர். அந்தநேரத்தில், விபத்தில் சிக்கி அப்பளம்போல் நொறுங்கி கிடந்த 2 லாரிகள் மீது, சென்னையில் இருந்து வந்த மற்றொரு லாரியும் பயங்கரமாக மோதியது. அதில் வந்த மதுராந்தகத்தை சேர்ந்த சதீஷ்குமார் (31), தென்காசியை சேர்ந்த முத்து கல்யாண்ராஜா (38) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் 3 லாரிகளும் நொறுங்கி 5 பேர், ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடினர்.

இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற பஸ், கார், லாரி உள்பட அனைத்து வாகனங்களும் சுமார் 2 கிமீ தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த திடீர் விபத்தால் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

Related Stories: