ஊழியர்கள் பற்றாக்குறை டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு பணி பாதிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பற்றாக்குறையால் கொரோனா தடுப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர், உதவி விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 187 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் 786 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், 190 கடை மேற்பார்வையாளர்கள் அடங்குவர். இந்நிலையில், அரசு துறைகளில் இருந்த பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு கடை மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் கூறுகையில், “சென்னையில் ஒரு கடைக்கு குறைந்தது 5 முதல் 8 வரையிலான கடை மேற்பார்வையாளர்கள் உள்ளனர். ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கடை மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால், 20 கடைக்கு ஒரு நபர் வீதம் கடை மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக 32 கடைகள் கடை மேற்பார்வையாளர் இல்லாமலேயே இயங்கி வருகிறது. இதேபோல், கூடுதல் கடைகளை திறக்கூடாது என அரசு தெரிவித்த பின்னரும் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 37 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளையும் மேற்பார்வையிடும் பணி மிகவும் கடினமாகி உள்ளது. இதனால், கடை பணியாளர்கள், மேற்பார்வையாளர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பணி சுமை காரணமாக கொரோனா தடுப்பு பணிகளையும், பராமரிப்பு பணிகளையும், பில் போடும் பணியை மேற்கொள்வதிலும் பிரச்னை எழுந்துள்ளது. எனவே, கூடுதல் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை நியமிப்பதன் மூலம் இப்பிரச்னையை அரசு தவிர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>