சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ரூ.1,100 கோடியில் 6 கதவணை, 3 தடுப்பணை: கூடுதலாக 6 டிஎம்சி நீரை சேமிக்கலாம்; 2030 மக்கள்தொகை கணக்கில் கொண்டு நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக ரூ.1,100 கோடி செலவில் கூடுதலாக 6 டிஎம்சி நீரை சேமித்து வைக்கும் வகையில் 6 இடங்களில் கதவணை, 3 இடங்களில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 11.50 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 5 ஏரிகள் வடகிழக்கு பருவமழையை நம்பி தான் உள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பெய்தாலும், அவற்றை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையியும், வரும் 2030ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு சென்னை மாநகரின் குடிநீர் தேவையை அதிகரிக்க புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, பாலாறு, கொசஸ்தலையாறு, கூவம் உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் புதிதாக ₹1100 கோடி செலவில் 9 இடங்களில் கதவணை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 6 டிஎம்சி நீரை சேமித்து வைக்க முடியும். அதன்படி, பாலாற்றில் படாளம்- உதயம்பாக்கம் இடையே, பாலூர், வெங்குடி, வெங்கடாபுரம், வெள்ளியூர், செம்பேடு உட்பட 6 இடங்களில் இந்த கதவணை, 3 இடங்களில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கதவணைகள் மூலம் 0.5 டிஎம்சி முதல் 1.5 டிஎம்சி வரை சேமித்து வைக்கப்படும். இதுவரை, இந்த ஆற்றுப்படுகைகளில் தடுப்பணை மட்டுமே அமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, கூடுதல் நீரை சேமித்து வைக்கும் வகையில் மாயனூர் அருகே கட்டளையில் அமைக்கப்பட்டது போன்று, கதவணையாக அமைக்கப்படுகிறது. இந்த கதவணையில் மதகுகள் பொருத்தப்பட்டு, அதில் இருந்து உபரியாக செல்லும் நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

இந்த கதவணைகளின் மூலம் சேமித்து வைக்கப்படும் நீர் மூலம் அப்பகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்த முடியும். மேலும், கதவணைகளில் சேமித்து வைக்கப்படும் நீரை குடிநீர் மற்றும் விவசாயிகளின் பாசன தேவைகளுக்காக திருப்பி விட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எதிர்கால குடிநீர் தேவையை பெரிய அளவில் பூர்த்தி செய்ய முடியும். இந்த திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, அரசாணை வெளியிடப்பட்டவுடன் பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

*பாலாற்றில் படாளம்- உதயம்பாக்கம் இடையே,  பாலூர், வெங்குடி, வெங்கடாபுரம், வெள்ளியூர், செம்பேடு உட்பட 6 இடங்களில் கதவணை, 3 இடங்களில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.

*ஒவ்வொரு கதவணைகள் மூலம் 0.5 டிஎம்சி முதல் 1.5 டிஎம்சி வரை சேமித்து வைக்கப்படும்.

Related Stories: