புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு: மாநகராட்சி முடிவு

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரும் தேர்தலின் போதும் முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்வீப் (SVEEP) திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அனைத்து கல்லூரிகளிலும் தேர்தல் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் கல்லூரிகள் முழுமையாக செயல்படாமல் உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சென்னை மாநகராட்சி கூடுதல் தேர்தல் அலுவலரும், துணை ஆணையருமான மேகநாத ரெட்டி, தேர்தல் பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் ெபர்மி வித்யா, தேர்தல் கல்வியறிவு மன்றத்தின் மாநில அளவிலான பயிற்சியாளாரும், சென்னை மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் முனியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக கேமநாத ரெட்டி கூறுகையில், “தேர்தல் நடைமுறைகளை தொடர்பாக இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆன்லைன் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது. இதன்படி தேர்தல் நடைமுறையின் ஆன்லைன் பங்கேற்பு என்ற நிகழ்ச்சியின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது” என்றார். சென்னையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 64,152 முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி 15,002 முதல் தலைமுறை வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: