நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பு சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் நாளை திறப்பு: அறநிலையத்துறை தகவல்

சென்னை: கோயில்களின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட சென்னை மண்டல இணை ஆணையர்கள் அலுவலகத்தை நாளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் 3 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களை ஒரே இணை ஆணையர் கவனிப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இதனால், கோயில்களின் நிர்வாகத்தில் குளறுபடி, வாடகை வசூலிப்பதில் தாமதம், வருவாய் முறைகேடு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறுவது தொடர்கதையாகி வந்தது. இதையடுத்து சென்னை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதில், சென்னை மண்டலம் இணை ஆணையர்-1 அலுவலக கட்டுப்பாட்டில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அயனாவரம், சென்னை மண்டலம் இணை ஆணையர் -2ல் மயிலாப்பூர், அமைந்தகரை, மதுரவாயல், கிண்டி, மாம்பலம், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்க நல்லூர் வருவாய் வட்டங்களாக பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து சென்னை மண்டலம்-2 இணை ஆணையராக ரேணுகா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வந்தது. ஏற்கனவே, இடப்பற்றாக்குறை காரணமாக செயல்பட்டு வந்த மண்டல இணை ஆணையர் 1 அலுவலகத்துக்கு புதிய அலுவலகமும், சென்னை மண்டல இணை ஆணையர்-2 அலுவலகத்துக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மண்டல இணை ஆணையர்-1 அலுவலகம் பாடியில் யாதவாள் தெரு என்ற முகவரியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படுகிறது.  அதே போன்று சென்னை மண்டல இணை ஆணையர் 2 அலுவலகம் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மட சாலையில்அமைந்துள்ள குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் நாளை முதல் செயல்படவுள்ளது.

இந்த அலுவலகங்களில் மண்டல உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை மண்டல உதவி ஆணையர்/நகைகள் சரிபார்ப்பு அலுவலகமும் செயல்படவுள்ளது.  சென்னை மண்டல இணை ஆணையர் 2 அலுவலகத்தை காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள்ளும், சென்னை மண்டல இணை ஆணையர்-1 அலுவலகத்தை காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள்ளும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார். இந்த விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம்கபூர், ஆணையர் பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: