ரூ.4 ஆயிரம் கோடியில் நடக்கும் பணிகளுக்காக தரக்கட்டுபாட்டு கோட்டத்துக்கு பரிசோதனை கருவிகள் வாங்க முடிவு

சென்னை: பொதுப்பணித்துறையில் ரூ.4 ஆயிரம் கோடியில் நடக்கும் திட்டப்பணிகளின் தரத்தை உறுதி செய்ய தரக்கட்டுபாட்டு கோட்டத்துக்கு பரிசோதனை கருவிகள் வாங்கப்படுகிறது. தமிழக பொதுப்பணித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு பல திட்டப்பணிகள் நடக்கிறது. இந்த பணிகளின் தரத்தை கண்காணிக்க நீர் ஆய்வு நிறுவனம் கட்டுபாட்டின் கீழ் திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களில் தரக்கட்டுபாட்டு கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டம், திட்ட பணிகளை அவ்வ போது ஆய்வு செய்கிறது. மேலும், பணிகள் முடிந்த பிறகு, அந்த கோட்டம் சார்பில் தரச்சான்று கொடுத்தால் மட்டுமே பில் தொகை விடுவிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது.

ஆனால், இந்த கோட்டம் சார்பில்  தர பரிசோதனை கருவி இல்லை. இதனால், திட்டப்பணிகள் தரமாக நடைபெறுகிறதா என்பதை தரக்கட்டுபாட்டு கோட்டம் சார்பில் கண்டறிய முடியாத நிலை தான் இன்றளவும் உள்ளது. இந்த நிலையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு மூலம் நடக்கும் திட்டப்பணிகளின் தரத்தை கண்காணிக்கும் வகையில் தரபரிசோதனை கருவி வாங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்பேரில், தற்போது, பொதுப்பணித்துறையில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் சிமென்ட், செங்கல், இரும்பு கம்பிகளின் தரத்–்தை ஆய்வு செய்ய இயந்திரம் வாங்கப்படுகிறது.

அதே போன்று கான்கிரீட் வலுவாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கும் இயந்திரம், மணல், ஜல்லி தரத்தை கண்டுபிடிக்க ஜல்லடை ஆய்வு செய்வதற்கான இயந்திரம் வாங்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன், தர பரிசோதனை கருவிகள் வாங்கப்படுகிறது. இதை தொடர்ந்து, 3 கோட்டங்களில் ஆய்வு கூடம் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கூடத்தில் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதனை செய்த பிறகே தரச்சான்று வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* 3 கோட்டங்களில் ஆய்வு கூடம் அமைகிறது

* தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு பொதுப்பணித்துறை கடிதம்

Related Stories:

>