அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பா.ஜ தலைவர் எல்.முருகன் அறிவிப்பு

சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழா தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசி வழங்குவதிலும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார் பிரதமர் மோடி. கொரோனா தடுப்பூசியை 96 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. பாஜகவில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்துக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. வரும் 27ம் தேதி பழனிக்கு நானும், தேசிய

பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவியும் காவடி எடுத்து செல்ல உள்ளோம்.

காங்கிரஸ் கட்சி இந்தியாவில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா?. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என்று மத்திய அரசு உறுதி செய்துள்ளது. நாங்கள் எந்த ரவுடிகளையும் கட்சியில் சேர்ப்பதில்லை. சசிகலா மட்டுமல்ல. யாராக இருந்தாலும் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். சசிகலா விரைவில் குணமடைய வேண்டும். சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. வரும் நாட்களில் தேசியத் தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வருவார்கள். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும். ராகுல் காந்திக்கு தமிழைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. தமிழைப் பற்றி ராகுலுக்கு எதுவும் தெரியாது. ஒரு திருக்குறளை ராகுல் காந்தியால் சொல்ல முடியுமா?. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: