ஜெயலலிதா நினைவிட பணிகளை மேற்கொண்ட 7 ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணம் பட்டுவாடா பாக்கி: வரும் 27ம் தேதி திறப்பு விழாவிற்கு தடைகோரி கவர்னரிடம் மனு

சென்னை: ஜெயலலிதா நினைவிட பணிகளை மேற்கொண்ட 7 ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படாத நிலையில், வரும் 27ம் தேதி திறப்பு விழாவிற்கு தடைகோரி கவர்னரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018 மே 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அன்றைய தினத்தில் இருந்து இரவு, பகலாக கட்டுமான நடந்து வருகிறது. இப்பணிகளை டெண்டர் எடுத்த கிருஷ்ணமூர்த்தி அன்கோ என்ற முதன்மை ஒப்பந்த நிறுவனம் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ்

பல்வேறு பணிகளை செய்ய பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

அந்த நிறுவனங்கள் மேற்கொண்ட பணிகளுக்காக சிறிதுசிறிதாக பணம் வழங்கப்பட்டன. ஆனால், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அந்த நிறுவனங்கள் செய்து முடித்த பணிகளுக்கான தொகை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது வரை ரூ.1 கோடி வரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் கேட்டால் எங்களுக்கு பணம் தரவில்லை என்று முதன்மை ஒப்பந்த நிறுவனம் கையை விரித்து விட்டதாக தெரிகிறது.  இந்நிலையில் வரும் 27ம் தேதி நினைவு மண்டபம் திறக்கப்படவுள்ளது. ஆனால், ₹1 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப தர வேண்டும். இல்லையெனில் ஆளுநரிடம் புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட பணியை செய்த 7 நிறுவனங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை. எனவே,  ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணம் தரும் வரை வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நினைவு மண்டப திறப்பு விழாவினை தவிர்க்கும் வகையில், அதற்கு தடை செய்ய கோரி கவர்னரிடம் கோரிக்கை மனு வழங்க முடிவு செய்யப்பபட்டுள்ளது’ என்றார்.

Related Stories: