துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் கடத்தி வந்த ரூ.4.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 18 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு 3 சிறப்பு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புடைய 8.5 கிலோ தங்கம் விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயிலிருந்து நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று காலை வரை எமரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய 3 சிறப்பு விமானங்கள் சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தன. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 18 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். இவர்கள் அணிந்திருந்த மாஸ்க்குகள், உள்ளாடைகள், பேன்ட் பெல்ட்டுகள், பாக்கெட்கள் மற்றும் ஆசனவாய் என்று பல்வேறு பகுதிகளில் தங்க பேஸ்ட்கள், தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 18 பயணிகளிடமிருந்தும் மொத்தம் 8.5 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி. இதையடுத்து 18 பேரையும் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 18 பேரும் ஒரே கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள். தனித்தனி விமானங்களில் வந்துள்ளனர். மேலும் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: