வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து அதிமுக கூட்டணியில் பாமக விலகல்?:'நிர்வாக குழு நாளை அவசரமாக கூடுகிறது

சென்னை: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்காததைக் கண்டித்து அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலக முடிவு எடுப்பது குறித்து நாளை நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தற்போது இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தேர்தல் ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, கூட்டணி கட்சிகளை இறுதி செய்து விட்டது. தொகுதிப் பங்கீடு மட்டுமே பேச வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தாங்கள்தான் பெரிய கூட்டணி கட்சி என்று நினைத்து அதிக தொகுதிகளை கேட்டு மிரட்டத் தொடங்கிவிட்டன. அதில் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் பாஜ, 60 தொகுதிகளுக்கு குறையாமல் சீட் வேண்டும் என்று கேட்டு வருகிறது. தங்களுடன் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தாங்கள் சீட் ஒதுக்கிக் கொள்கிறோம் என்றும் கூறி வருகிறது. தேமுதிகவோ கடந்த மக்களவை தேர்தலில் சீட் குறைவாக கொடுத்ததில் அதிருப்தியில் இருந்தது. அதன்பின்னர் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட், கேட்காத தமாகாவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என்று அதிமுக வாரி வழங்கியது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க அதிமுக தலைமை மறுத்து விட்டது. இதனால் அக்கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.

வருகிற சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவுக்குத்தான் முக்கியம். தேமுதிகவுக்கு முக்கியமில்லை. இதனால் கூட்டணியில் தாங்கள் இறங்கி வரப்போவதில்லை. அதிமுகதான் அதிக சீட் தந்து தங்களை திருப்திப்படுத்த இறங்கி வரவேண்டும் என்று கருதுகிறது. இதனால் அதிக சீட் கேட்டு தேமுதிக முரண்டு பிடித்து வருகிறது. அதேநேரத்தில் பாமகவோ, தேர்தலுக்கு முன்னதாகவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டது. பின்னர் 20 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால் கூட ஏற்றுக் கொள்வோம் என்று அறிவித்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள்இருவரும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்கமணி, வேலுமணி ஆகியோர் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு கட்ட பேச்சுவார்த்தையிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் பாமக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்து விட்டார். இதனால் ராமதாசுடன் 3வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவோ சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதை மட்டும் ஏற்க முடியாது. எங்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியே ஆக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பிடிவாதமாக கூறிவிட்டார். இந்தநிலையில், அதிமுக இறங்கி வராததால், மூத்த பாமக தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வந்தார். இதில், நாளை நிர்வாகக் குழுவைக் கூட்டி, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தனித்துப் போட்டியிடலாம் என்றும் பாமக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வட மாவட்டங்களில் கணிசமாக தொண்டர்கள் உள்ளதால் தனித்துப் போட்டியிட்டாலே பல தொகுதிகளை பிடிக்க முடியும் என்று ராமதாஸ் கருதுகிறார்.

இதனால்தான் தனித்துப் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் இட ஒதுக்கீடு கேட்டு பாமக போராட்டம் அறிவித்தபோது, இளைஞர்களிடம் கடும் எழுச்சி இருந்தது. இதனால்தான் தனித்துப் போட்டியிடும் முடிவை ராமதாஸ் துணிந்து எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், நிர்வாகக் குழு கூட்டம் குறித்து, பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் 25ம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இணைய வழியில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறகிறது. ஜனவரி 9ம் தேதி நடைபெற்ற பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்படவிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி விலகல் முடிவு அறிவிக்கப்படும் என்று பாமக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

* வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிடிவாதமாக உள்ளார்.

* இதனால் தொகுதி பங்கீடு குறித்து பொங்கல் முடிந்த பிறகு 3ம் கட்ட பேச்சுவார்ததை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி செல்லவில்லை.

* அதிமுக கூட்டணியில்60 சீட்டுக்கு குறையாமல் பா.ஜ கேட்டு வருகிறது.

* ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் தேமுதிக உள்ளது.

Related Stories: