×

ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவதுதான் முதல் பணி: யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் விட மாட்டான் என பரபரப்பு பேச்சு

சென்னை: ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம்  என்பதை கண்டறிந்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவது தான் முதல் பணி என்றும், யார் தடுத்தாலும் விட மாட்டான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரவாயல் அருகில் உள்ள அடையாளம்பட்டு ஊராட்சியில் நேற்று மாலை மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் திரண்டிருந்த மக்களிடையே அவர் பேசியதாவது: 16,500க்கும் மேற்பட்ட மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் 22 ஆயிரம் கிராம சபை கூட்டத்தை முடித்து இருக்கிறோம். மக்கள் கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது இந்த மாதம் இறுதி வரை தான். ஆனால் நம்முடைய தோழர்கள் நாங்கள் நடத்துகிறோம். வாய்ப்பு கொடுங்கள், அவகாசம் கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் தாராளமாக கூட்டத்தை நடத்தலாம். என்னை பொறுத்த வரைக்கும் இன்றுடன்(நேற்றுடன்) முடிக்கிறேன். நான் முடிக்கிறேன் என்றால் அடுத்து ஒரு பயணத்தை மேற்கொள்ள உள்ளேன். அதை இப்போது சொல்ல மாட்டேன். வருகிற 25ம் தேதி அறிவிக்க போகிறேன்.. எல்லா மாவட்டத்துக்கும் நான் போக போகிறேன்.

234 தொகுதிகளில் எனது கவனம் இருக்க போகிறது. அந்த வகையில் பெரிய பயணத்தை வகுத்து வைத்து இருக்கிறேன். டெல்லியில் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளும்  கூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் சரி. விவசாயிகளின் விரோதமான ஆட்சியாக தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று திட்டமிட்டு இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நான் கூட கடந்த 4, 5 நாட்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

என்ன அறிக்கை என்றால், 3 மாதத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் விட்டு இருக்கிறார்கள். இன்னும் 3 மாதத்தில் எப்படி செய்து முடிக்க முடியும். டெண்டர் விட்டது வேலையை செய்றதுக்காக அல்ல. முதலில் அதில் கமிஷன் வாங்கிக் கொள்ள தான். திமுக ஆட்சியில் பால் விலை 28 ரூபாய், இப்போது 40 ரூபாய். திமுக ஆட்சியில் சிலிண்டர் 250 ரூபாய், அதிமுக ஆட்சியில் 780 ரூபாய். உளுந்தம் பருப்பு 60 ரூபாய், இப்போது 140 ரூபாய், பாமாயில் ரூ.48, இப்போத 118 ரூபாய் இப்படி தான் போய்க் கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம். ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என்று தேர்ந்தெடுத்து வரை வெற்றி பெற வைத்தீர்கள்.

வெற்றி பெற வைத்தாலும் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் 1.1 சதவீதம் தான். ஒரு சதவீதம் அதிகமாக வாங்கியதால் அவர்கள் ஆட்சி. ஒரு சதவீதம் கம்மி அதனால் நாம் எதிர்க்கட்சி. பரவாயில்லை. அதனால் கவலைப்படவில்லை. அவர் ஆட்சிக்கு வந்த உடன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்ட அவருக்கு என்ன சிகிச்சை நடக்கிறது, யாருக்காவது தெரிந்ததா. அது போகட்டும். எப்படி இறந்தார் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. என்ன தான் இருந்தாலும் அவர் முதலமைச்சர். நமக்கு எதிரி தான். திமுகவுக்கு விரோதமான கட்சி தான்.

கொள்கை, கோட்பாடுகளில் எதிரி தான். இருந்தாலும் நம்முடைய முதலமைச்சர். நாட்டின் முதலமைச்சர் இறந்து போய் இருக்கிறார். அவர் இறந்தது இது வரை தெரியவில்லை. மர்மாக இருக்கிறது. திமுக 4 மாதத்தில் ஆட்சிக்கு வரும். ஆட்சியில் பொறுப்பில் போய் உட்கார போகிறோம். ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்த மறுநொடியே தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவோம். அதையும் தாண்டி சொல்கிறேன். உறுதியாக சொல்கிறேன். ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவது தான் நமது முதல் பணி.

யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் விட மாட்டான். அது உறுதி. எதற்கு சொல்கிறேன் என்றால், அந்த அம்மா பெயரை வைத்து கொண்டு கட்சி நடத்துகிறார்கள். அந்த அம்மா பெயரை சொல்லி ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். 27ம் தேதி அந்த அம்மாவின் சமாதியை திறக்கிறார்கள். திறக்கட்டும். நான் ஒன்றும் சொல்லவில்லை. தவறு என்றும் சொல்லவில்லை. திறப்பதற்கு முன்னர் என்ன செய்து இருக்க வேண்டும். அவரது மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுப்பிடித்து சொல்லியிருக்க வேண்டாமா?. கண்டுப்பிடித்து திறந்து வைத்து இருந்தால் நான் பாராட்டி இருப்பேன்.

 27ம் தேதி தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வர போகிறார்கள். இந்த நிலையில் சசிகலாவுக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் என்று ஒரு செய்தி வருகிறது. கொரோனா என்றார்கள், மூச்சு அடைப்பு என்று சொன்னார்கள். இப்படி பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் அவர் உடல் நலம் பெற்று விரைவில் வர வேண்டும் என்பது தான் திமுக சார்பில், திமுக தலைவர் என்ற முறையில் நல்ல வாழ்த்து செய்தியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா மறைந்து 4 வருடம் முடிந்து விட்டது. அவர் மரணம் குறித்து விசாரிப்பதற்காக கமிஷன் போடப்பட்டு 3 வருடம் முடிய போகிறது.

இதுவரை ஏதாவது ஒரு செய்தி உண்டா?. அதைக் கண்டுப்பிடிக்க யோக்கியதை இல்லை. அவர் சமாதியை திறக்க என்ன யோக்கியதை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக பொருளாளர்  டி.ஆர்.பாலு, அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, பகுதி செயலாளர்கள்  காரப்பாக்கம் கணபதி, நொளம்பூர் ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா மற்றும் ராமாபுரம் வி.ராஜேஷ், செஞ்சி கார்த்திக் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

* ‘யானையை கொன்றவர்கள் தப்பிவிடாதபடி தண்டிக்க வேண்டும்’
நீலகிரியில் யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. காட்டிலும் நாட்டிலும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன் யானை. மனிதத்தன்மையற்ற வகையில் தீ வைத்தோரையும் இத்தகைய வன்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மனித மிருகங்களையும், சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

Tags : Stalin ,country ,death ,anyone ,Jayalalithaa , The first task is to find out who was responsible for Jayalalithaa's death and identify the country:
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!