கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.46 லட்சம் நிதியுதவி: உத்தரவில் கையெழுத்திட்டார் பைடன்

வாஷிங்டன்: கொரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் நேற்றைய நிலவரப்படி, 2 கோடியே 48 லட்சத்து 22 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 117 பேர் இறந்துள்ளனர். மேலும், நாட்டின் பொருளாதாரமும் சரிந்து, மக்கள் பாதித்துள்ளனர். இதனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா ரூ.1.46 லட்சம் கொரோனா நிதியுதவி வழங்குவதற்கான சட்டம், கடந்த டிரம்ப் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கான சட்டத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார்.

நாட்டின் பொருளாரத்தை மீட்டும் நடவடிக்கை என்ற பெயரில், பைடன் நேற்று பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில், மக்களுக்கு கொரோனா நிதியுதவி வழங்கும் உத்தரவும் ஒன்றாகும். இதன் மூலம், பொருளாதார பாதிப்பில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் திட்டத்தின் கீழ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 1.46 லட்சம் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இதற்காக, பல லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், “வளர்ந்து வரும் உள்நாட்டு தீவிரவாதம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உள்ளது. எனவே, அதற்கு ஏற்ப கடுமையான கொள்கைகள், திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. எப்பிஐ, உள்நாட்டு பாதுகாப்பு துறை ஆகியவற்றுடன் இணைந்து உள்நாட்டு தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தேசிய புலனாய்வு இயக்குனரை அதிபர் பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்,” என்று கூறினார்.

* டிரம்ப் மீது தீர்மானம்: 8ம் தேதி விசாரணை

கேபிடால் கட்டிட வன்முறைக்கு தூண்டியது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் மீதான விசாரணை அமெரிக்க செனட் சபையில் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கும் என்று செனட் பெரும்பான்மை தலைவர் சக் ஸ்க்யூமர் தெரிவித்தார்.

* முதல் கருப்பர் இன ராணுவ அமைச்சர்

அமெரிக்காவின் ராணுவ அமைச்சராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் லாய்டு ஆஸ்டினை நியமிக்க செனட் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் 93-2 வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம், அமெரிக்காவின் முதல் கருப்பர் இன ராணுவ அமைச்சர் என்ற பெருமையை ஆஸ்டின் பெற்றுள்ளார்.

Related Stories: