×

இலங்கை 381 ரன் குவிப்பு இங்கிலாந்துக்கு நெருக்கடி

காலே: காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்திருந்தது (87 ஓவர்). மேத்யூஸ் 107, டிக்வெல்லா 19 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மேத்யூஸ் 110 ரன் எடுத்து (238 பந்து, 11 பவுண்டரி) ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் பிடிபட்டார். அதன் பிறகு டிக்வெல்லா, தில்ரூவன் பெரேரா இருவரும் பொறுப்புடன் விளையாடினர். சதத்தை நெருங்கிய டிக்வெல்லா 92 ரன்னில் (144 பந்து, 10 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஒரு முனையில் தில்ருவன் பெரேரா பொறுப்புடன் விளையாடி ரன் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். அறிமுக வீரர் ரமேஷ் மெண்டிஸ், சுரங்கா லக்மல் இருவரும் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. லசித் எம்புல்டெனியா 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தில்ருவன் 67 ரன்னில் ஆட்டமிழக்க (170 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) இலங்கை முதல் இன்னிங்சில் 381 ரன் குவித்தது (139.3 ஓவர்). இங்கிலாந்து தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், 29 ஓவரில் 13 மெய்டன் உட்பட 40 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். மார்க் வுட் 3, சாம் கரண் ஒரு விக்கெட் கைப்பற்றினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிராவ்லி (5), டோம் சிப்லி  (0) இருவரும் எம்புல்டெனியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 7.1 ஓவரில் 5 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஜானி பேர்ஸ்டோ - கேப்டன் ஜோ ரூட் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.பேர்ஸ்டோ பொறுமையாக பந்துகளை எதிர்கொள்ள, முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய ஜோ ரூட் 65 பந்தில் அரைசதம் விளாசினார். 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்துள்ளது (30 ஓவர்). ஜோ ரூட் 67,  பேர்ஸ்டோ 24 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.


Tags : Sri Lanka ,Crisis ,England , Sri Lanka 381 runs Crisis for England
× RELATED கொரோனாவால் இறப்பவர்களின் உடலை...