யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட பொக்காபுரம் பகுதியில் உடலின் முதுகு பகுதியில் ஆழமான காயத்துடன் சுற்றி திரிந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானைக்கு கடந்த மாதம் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த யானை கடந்த வாரம் இடது காது பகுதி கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் சுற்றி திரிந்தது. காது பகுதி கிழிந்து தீக்காயம் இருந்ததால் யாராவது வெடி பொருட்கள் வீசி கொல்ல முயற்சி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

காயத்துடன் திரிந்த யானைக்கு தெப்பக்காடு முகாமில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 கும்கிகள் உதவியுடன் 3 கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழுவினர் கடந்த 19ம் தேதி யானை மயக்க  மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் லாாியில் ஏற்றி தெப்பக்காடு முகாமிற்கு புறப்பட்டனர். ஏற்கனவே முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் மற்றும் காதில் ஏற்பட்ட கடுமையான தீக்காயத்தால் அவதிப்பட்ட யானை செல்லும் வழியில்  லாரியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. சிங்காரா வனச்சரகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு யானைக்கு தீக்காயம் ஏற்படுத்தியவர்கள் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் கசிந்தது. மசினகுடி மாவனல்லா பகுதியில் உள்ள ரிசார்ட் அருகே யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து யானை மீது வீசியுள்ளனர். அதில் தான் அந்த யானைக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. யானையை சிலர் கொடுமைப்படுத்தி, உயிர்பலிக்குக் காரணமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. இதுதொடர்பாக சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்; காட்டில் வாழ்பவற்றை மிருகங்கள் என்கிறோம். ஆனால் நாட்டில் நடமாடுவோரே மிருகங்கள் என நினைக்கும் அளவுக்கு, நீலகிரியில் யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. யானை என்பது ஒற்றை உயிரினமன்று; காட்டிலும் நாட்டிலும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன்!. அதன் அருமை அறியாது, மனிதத்தன்மையற்ற வகையில் தீ வைத்தோரையும் இத்தகைய வன்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மனித மிருகங்களையும், சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: