திங்கள்நகரில் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும் திறப்பு விழாவுக்கு ஏங்கும் புதிய பேருந்து நிலையம்

திங்கள்சந்தை: குமரி மாவட்டம். திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் திங்கள்நகர் பகுதியில் 3 பிரிவுகளாக சுமார் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழமை வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தின் மேல்மட்ட கூரைகள் பழுதடைந்து, காங்கிரீட் தகடுகள் விழுந்ததால் கடை வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே பழுதடைந்த பேருந்து நிலையத்தை முழுமையாக அகற்றி, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள், வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தமிழக அரசு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்க ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்தது.

அதன்அடிப்டையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, நவீன வடிவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் பேருந்து நிலையம் திறப்பு விழா காணாமல் உள்ளது. இதனால் பஸ்கள் மெயின் ரோட்டில் தாறுமாறாக நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட பல மாதங்களாக கிடப்பில் கிடக்கும் திங்கள்நகர் புதிய பேருந்து நிலையத்தை இம்மாத இறுதிக்குள் திறந்து பேருந்துகளை இயக்க வேண்டும் வியாபாரிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: