×

ரசகுல்லாவின் வயது 150

நன்றி குங்குமம் தோழி

இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பால், சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து செய்யப்படும் பஞ்சு போன்ற மென்மையான தித்திப்பான ரசகுல்லாவை விரும்பாதவர்களே இருக்க முடியாது. நினைத்தாலே இனிக்கும் ரசகுல்லா மேற்கு வங்க மாநிலத்தின் பூர்விகமான இனிப்பு. ரசம் என்றால் சாறு, குல்லா என்றால் பந்து என்று பெங்காலியில் அர்த்தம். இதனால்தான் இனிப்பு சாற்றில் ஊறவைத்து கிடைக்கும் உருண்டை வடிவ இனிப்புக்கு ரசகுல்லா என்று பெயர் வைத்துள்ளனர் மேற்கு வங்க மாநிலத்தவர்.

சரி விஷயத்திற்கு வருவோம். ரசகுல்லா தோன்றி 150 ஆண்டுகள் ஆகிறது. இதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் டிசம்பர் 28ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை மூன்று நாட்கள் ரசகுல்லா விழாவை மேற்கு வங்க அரசு நடத்தியது. தங்கள் மாநில இனிப்பை பிரபல படுத்தும் நோக்கிலும், அதை கண்டு பிடித்த நோபின் சந்திரதாஸ் என்பவரை போற்றும் விதமாகவும் இந்த விழா நடத்தப்பட்டது. சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது போல் ரசகுல்லா எங்கு தோன்றியது என்பதில் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா இரு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது.

இரு மாநிலங்களும் ரசகுல்லாவுக்கு உரிமை கோரி புவிசார் குறியீடு ஒதுக்கக் கோரிக்கை விடுத்தன. அப்போது ஒடிசா அரசு, தங்கள் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகன் நாதர் கோயிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இறைவனுக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படுவதால், எங்கள் மாநிலத்திற்கு சொந்தமானது ரசகுல்லா என உரிமை கொண்டாடியது ஒடிசா. மேற்கு வங்கமும் வரிந்து கட்டிக்கொண்டு உரிமை போரில் ஈடுபட்டது. பாலிலிருந்து பாலாடைக் கட்டியைப் பிரித்தெடுப்பது நெடுங்காலமாகத் தவறான உணவுப் பழக்கமாக இந்தியாவில் கருதப்பட்டது.

போர்ச்சுக்கீசியர்களிடம் இருந்து பாலாடைக் கட்டியைத் தயாரிக்கும் முறையை மேற்கு வங்கத்தினர் கற்றுக்கொண்டுள்ளனர். அந்த இனிப்பை தான், கொல்கத்தாவின் பாக்பஜாரில் 1866ம் ஆண்டு முதல் நோபின் சந்திரதாஸ் குடும்பத்தினர் ரசகுல்லாவாக தயாரித்து விற்று வருவதாக மம்தா பானர்ஜி அரசு ஆதாரத்தை காட்டியது. முடிவில் கடந்த 2017,  நவம்பர் 14ம் தேதி ரசகுல்லா மேற்கு வங்கத்திற்கு சொந்தமானது என உறுதி  செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதையடுத்து “ரசகுல்லா தினம்”  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி கொல்கத்தா நியூடவுன் பகுதியில் இனிப்பு அரங்கம் உருவாக்கப்பட்டு அதில் விதம் விதமான ரசகுல்லாக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டன. நோபின் சந்திர தாஸ் வடக்கு கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியில் இனிப்பு கடையை நடத்தி வந்தார். ரசகுல்லா அறிமுகம் செய்த பிறகு தான் இவர் கடையில் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை வங்காள இனிப்புகள் என்றாலே கே.சி.தாஸ் இனிப்பகம்தான் நினைவுக்கு வரும். கே.சி.தாஸ், நோபின் சந்திரதாஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நோபின் சந்திரதாஸையும் அவர் உருவாக்கிய ரசகுல்லாவையும் கவுரவிக்கச் சிறப்பு தபால் உறையை வெளியிட இந்தியத் தபால் துறை முடிவெடுத்திருக்கிறது. இது கூடுதல் இனிப்பான செய்தி.

- கோமதி பாஸ்கரன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!