சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரியில் 46-வது நாளாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்.: குடிநீர், உணவு இல்லாமல் தவிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரியில் 46-வது நாளாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதிகளில் உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் நிர்வாகம் துண்டித்த நிலையிலும் மாணவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அரசு கல்லூரியாக செயல்படும் என்று அறிவித்த பிறகும் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து 46-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மறு அறிவிப்பு வரும்வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படும் என்று கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. மேலும் கல்லூரி விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

மாணவர்களின் போராட்டம் தொடர்வதால் மாணவர்கள் தங்கியுள்ள குமராஜா முத்தையா விடுதியில் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்தி உள்ளனர். தற்போது குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கிடைக்காத சூழலில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் விடுதியில் இருந்து போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வரும் கல்லூரி நுழைவாயிலை நிர்வாகம் தற்போது அடைந்துள்ளது. இதனை கண்டித்து கல்லூரியின் நுழைவாயிலிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நியாயமான கோரிக்கைக்காக போராடும் மருத்துவ மாணவர்களை அதிகாரத்தை கொண்டு மிரட்டும் தமிழக அரசின் மனசாட்சியற்ற செயலை கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.  

பலமடங்காக வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வை காணுமாறு ஸ்டாலின் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: