சசிகலா சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்க சதி: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த தோழர்களுக்கு பாராட்டு விழா மதுரையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில நாட்களுக்கு முன் இலங்கையில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மீனவர்களுக்கு, இழப்பீட்டு தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தி தரவேண்டும். அதிமுக ஆட்சி முடிவதற்குள் ஆளும்கட்சியினர் திட்டங்கள் வழியே கொள்ளை அடிக்க நினைக்கிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாமலேயே தண்டனை அனுபவித்து வருகின்றனர். தண்டனை காலத்தைவிட அதிக ஆண்டுகள் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சசிகலாவுக்கு இவ்வளவு நாளாக கொரோனா தொற்று வராமல் இப்பொழுது எப்படி வந்தது என சந்தேகம் வருகின்றது.

சசிகலா விடுதலை நேரத்தில் மருத்துவமனைகளை மாற்றி மாற்றி பந்தாட்டம் செய்கிறார்கள். சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது என சந்தேகம் வருகிறது. சசிகலா உடல்நிலை சந்தேகம் குறித்து கர்நாடக அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: