ஜவ்வாது மலையில் 7 ஆயிரம் ஆண்டு கற்கால கருவிகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் தலைமையில் கற்கருவிகள் குறித்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்டு பரந்து விரிந்த மலையாக ஜவ்வாதுமலைக் காணப்படுகிறது. ஜவ்வாது மலையின் மேற்குப் பகுதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். இப்பகுதி மூன்று நாடுகளையும் அதில் 34 கிராமங்களையும் உள்ளடக்கி காணப்படுகிறது. இதில் புதூர் நாட்டிற்கு உட்பட்ட கிளானூர் என்னும் ஊரில் 100க்கும் மேற்பட்ட புதியகற்காலக் கருவிகளை எங்கள் ஆய்வுக்குழுக் கண்டறிந்துள்ளது.

மேலும், கிளானூரில் உள்ள இலவநாச்சியம்மன் கோயில் வட்டாரத்தில் உள்ள  நிலத்தில் சிறிய கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலை இவ்வூர் மக்கள் பிள்ளையாரப்பன் கோயில் என்கின்றனர். இக்கோயிலில் 60க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான புதிய கற்காலக் கருவிகள் உள்ளன.  கிளானூரில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் கோயில் கொல்லை என்னும் இடம் உள்ளது. இங்கு புதர் மண்டிய இடத்தில் அரை வட்ட வடிவில் பெரிய 5 கற்களும், அதனைச் சுற்றி ஏராளமான கற்கருவிகளும் உள்ளன. இக்கற்கருவிகள் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் பயன்படுத்தியதாகும். மனிதன் இரும்பைக் கண்டறிவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வழவழப்பான கல்லைக் கோடாரி போன்ற அமைப்போடு உருவாக்கியுள்ளனர்.  மேல் பகுதி கைகளில் அடங்கும் வண்ணம் குவிந்தும், அடிப்பகுதி அகன்றும் கூர்மையாகவும் காட்சித்தரும். இவைப் பார்ப்பதற்கு இரும்பு கோடாரிகள் போலக் உள்ளது. கையில் அடங்கும் வண்ணம் இருப்பதால் இதற்கு கைக்கோடாரி என்ற பெயரும் உண்டு.

வேட்டையாடுவதற்கும், மரம், செடி, கொடிகளை வெட்டித் தூய்மைச் செய்யவும் இக்கருவிகள் பயன்பட்டிருக்கும். மலைவாழ் மக்கள் தங்கள் நிலங்களில் உழவுத் தொழிலை மேற்கொள்ளும்போதும் ஓடைகளுக்கு அருகாமையிலும் பெருவாரியாக இக்கற்கருவிகள் கிடைப்பதாகவும் அவற்றைச் சேகரித்து ஊர் பொதுவில் உள்ள கோயில்களில் பிள்ளையாரப்பன் என்ற கடவுளாக வழிபட்டும்  வரலாற்றைப் பாதுகாத்து வருகின்றனர் என்றார்.

Related Stories: