பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.65 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது-லாரி பறிமுதல்

சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.65 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய 3 பேர் கைதானார்கள். லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு மற்றும் சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கர்நாடக மாநிலம் ஹனூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற சரக்கு லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். லாரியில் அடுக்கி வைத்திருந்த 20 மக்காச்சோளம் மூட்டைகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.    இதில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்புள்ள 9 வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மார்டல்லியைச் சேர்ந்த லாரி டிரைவர் காந்தராஜ் (38), நீலகிரி மாவட்டம் கீழ்குந்தாவைச் சேர்ந்த கிளீனர் ரமேஷ் (30) மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் சுயம்புலிங்கம் (50) ஆகிய 3 பேரை போலீசார் சத்தியமங்கலம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரையும் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories: