களியக்காவிளை- திருவனந்தபுரம் பஸ் போக்குவரத்து தொடங்காததால் பயணிகள் அவதி: ஒரு கி.மீ நடந்து செல்லும் நோயாளிகள்

களியக்காவிளை: கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட போதிலும் களியக்காவிளை- திருவனந்தபுரம் இடையே பஸ் போக்குவரத்து தொடங்காததால் பயணிகள், மாணவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இஞ்சிவிளை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கேரள அரசு பஸ்களில் செல்ல களியக்காவிளையில் இருந்து பயணிகள், நோயாளிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குமரி, கேரள எல்லை பகுதியில் களியக்காவிளை பஸ் நிலையம் அமைந்துள்ளது. நாகர்கோவில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழிஞ்ஞம் உள்ளிட்ட நகரங்களையும் குமரி மாவட்ட மலையோர மற்றும் கடலோர கிராமங்களையும் இணைக்கும் பகுதியாக களியக்காவிளை விளங்கி வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் இருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு தற்போது பெரும்பாலும் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி விட்டனர்.

ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் வெளிமாநில போக்குவரத்து விவகாரத்தில் வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்ெகாண்டு வருகிறது.  மாநிலங்களுக்கு இடையேயான இ- பாஸ் முறை முற்றிலும் மறந்து விட்ட நிலையிலும் மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் மட்டும் சில நேரங்களில் அதிகாரிகள்சோதனை செய்து வருகிறார்கள். தேசிய அளவில் ரயில் போக்குவரத்தும் தொடங்கி விட்டதால் மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில் மூலம் பயணித்து வருகிறார்கள். ஆனால் பஸ் போக்குவரத்து இன்னும் தொடங்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். கேரளாவில் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்தும் நெய்யாற்றின்கரை, வெள்ளரடை, பனச்சமூடு, பொழியூர், குளத்தூர், பூவாறு, விழிஞ்ஞம் உள்ளிட்ட குமரி எல்லை கிராமங்களில் இருந்தும் களியக்காவிளைக்கு தினமும் 140 கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதில் சில பஸ்கள் பாறசாலை வந்து திரும்பி செல்கின்றன.  பெரும்பாலான கேரள பஸ்கள் பாறசாலையை அடுத்த இஞ்சிவிளை வரை இயக்கப்படுகிறது.

இஞ்சிவிளை பகுதியில் பஸ் நிலையம் எதுவும் இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றுகிறார்கள்.  நாகர்கோவில்,  கன்னியாகுமரி உள்பட குமரிமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து களியக்காவிளை பஸ் நிலையம் வரை தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.  குமரிமாவட்ட பயணிகள் கேரளா செல்ல வேண்டுமானால் களியக்காவிளை பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து இஞ்சிவிளை வரை நடந்தோ ஆட்டோ பிடித்தோ செல்ல வேண்டி உள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அனைத்து துறைகளிலும் அமலுக்கு வந்த பின்னரும் மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து மட்டும் இன்னும் தொடங்காதது பயணிகளை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. மாநில அரசுகள் இப்பிரச்சினையின் பாதிப்புகளை உணர்ந்து மாநில அரசுகள் பஸ் போக்குவரத்தை  தொடங்க முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாத இறுதியில் அறிவிப்பு வரலாம்

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து குறித்து மாநில அரசுகள் முறைப்படி அறிவித்தால் மட்டுமே பஸ் போக்குவரத்தை தொடங்க முடியும். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று வந்த அரசு பஸ்கள் தற்போது களியக்காவிளை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கலெக்‌ஷனும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கேரளாவில் கொரோனா தாக்குதல் தீவிரம் குறையாததாலும், இது குறித்து முடிவெடுக்க தாமதம் ஆகி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மாத இறுதியில் இது குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

எல்லை பகுதி மாணவர்கள் சிரமம்

தமிழ்நாடு காங்கிரங் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் டாக்டர் தம்பி விஜயகுமார் கூறும் போது, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் களியக்காவிளை வழியாக கேரளா சென்று வருகின்றனர். குமரிமாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் பரிசோதனைக்காகவும், தொடர் சிகிச்சைக்காகவும் நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் மூலம் சென்று வருகின்றனர். இந்நோயாளிகள் களியக்காவிளை ஜங்சன் முதல் இஞ்சிவிளை வரை நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இது போன்று கேரளாவின் உள் கிராமங்களை சேர்ந்த சிறுவியாபாரிகள் களியக்காவிளை சந்தை மற்றும் மளிகை கடைகளில் இருந்து பொருள்கள் வாங்கி பஸ்கள் மூலம் தங்கள் கிராமங்களுக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதில் சிரமங்கள் இருப்பதால் சந்தை வியாபாரம் பாதித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கேரளா மற்றும் தமிழக பள்ளிகள் தற்போது திறந்து விட்ட நிலையில் எல்லை பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் போக்குவரத்து பிரச்னையில் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே களியக்காவிளை பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மீண்டும் பஸ் இயக்க கேட்டு தமிழகம் மற்றும் கேரள அரசுக்கு மனு அனுப்பி உள்ளோம்.  வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து விரைவில் இதற்கான போராட்டம் அறிவிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: