விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முதல்வரின் உறவினருக்காக விதி மீறி சாலையை தோண்டி குழாய் பதிப்பு

* எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பஞ்.தலைவர் உள்பட கிராம மக்கள் மறியல்

* பெண்கள் உள்பட 61 பேர் கைது- போலீசாருடன் தள்ளுமுள்ளு, வாக்குவாதம்

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த தேவூர் புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி, சீரங்ககவுண்டம் பாளையத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஒரு தார்சாலை மட்டுமே உள்ளது. இந்நிலையில், இதே பகுதியில் வசிக்கும் முதல்வரின் உறவினர் ஒருவர், தனது விவசாய நிலத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுத்துச்செல்ல, விதிமுறைகளை மீறி அனுமதி பெற்றுள்ளார். காவிரி ஆற்றில் இருந்து குழாய் பதிக்க, கிராமத்தில் உள்ள தார்சாலையை தோண்டுவதற்கு, தாசில்தாரும் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், குழாய் பதிப்பதற்காக தார்சாலையை தோண்டுவதற்கு, ஊராட்சி மன்ற நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து, அனுமதி மறுத்துவிட்டது.

சம்பந்தப்பட்ட நபர், தடையையும் மீறி குழாய் பதிக்க முடிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,கடந்த மாதம் 30ம் தேதி, கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிய சாலை என்பதாலும், ஏராளமான வாகனங்கள் செல்வதாலும், சாலையை தோண்டினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என கூறிய மக்கள், தண்ணீர் எடுத்துச்செல்ல கால்வாய் அமைத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினர். இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில், குழாய் பதிக்கும் பணிக்காக பொக்லைனுடன் வந்த அதிகாரிகள், சாலையில் குழி தோண்டும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கீதா பாலு, துணை தலைவர் பழனியப்பன், அதிமுகவை சேர்ந்த 8 வார்டு உறுப்பினர்கள் மற்றும்  200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பிடிஓ ரவிச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சண்முகசுந்தரம்,   செந்தில் மற்றும் 150க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

பின்னர், டிஎஸ்பி ரமேஷ், தாசில்தார் விஜி ஆகியோர், ஊராட்சி மன்ற தலைவர் கீதா பாலு மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையில் குழாய் பதிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஊராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. உத்தரவும் போடப்படவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார். இதுதொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பணிகள் மேற்கொள்ள தடையாக இருந்த பெண்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பழனியப்பன் மற்றும் 8 அதிமுக உறுப்பினர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், 27 பெண்கள் உள்பட 61 பேரை கைது செய்த போலீசார், வேனில் ஏற்றிச்சென்று சங்ககிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன், சாலையை பறித்து குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரையும் ேநற்று இரவு 8 மணிக்கு போலீசார் விடுவித்தனர்.

போலீசார் தாக்கியதில் பெண்ணின் காது ஜவ்வு கிழிந்தது: செல்வகணபதி நேரில் ஆறுதல்

நேற்று மாலை சங்ககிரி தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த கிராம மக்களை,  சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி நேரில் சந்தித்து விசாரித்தார். அப்போது மறியலில் ஈடுபட்ட லட்சுமி (30)என்ற பெண்ணை, போலீசார் கைது செய்யும் போது  தாக்கியதில், அவரது காது ஜவ்வு கிழிந்து விட்டது என கண்ணீருடன் தெரிவித்தார். தொடர்ந்து குழாய் பதிக்கும் இடத்துக்கு சென்றார். அவர் வருவதை அறிந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்,பொக்லைன் இயந்திரத்தை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டனர். அப்போது,அங்கிருந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம், நடந்த சம்பவம் குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதியில் வசிப்பவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரையும் போலீசார் கைது செய்து விட்டனர். பள்ளம் தோண்டியதில் குடிநீர் இணைப்புகளை உடைத்து விட்டனர். வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என தெரிவித்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய டி.எம்.செல்வகணபதி, செய்தியாளர்களிடம் கூறும்போது, பொது சொத்துக்களை சேதப்படுத்தி 7 நபர்கள் பயனடைவதற்காக, 200 பேரின் குடிநீர் இணைப்புகளை துண்டித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடாசலம் மேற்பார்வையில், இப்பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் உள்ள போதே,அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து திமுக மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்போம். இப்பிரச்னையில் கலெக்டர் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்றார்.

Related Stories: