நெல்லை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் ஆக்கிரமிக்கும் மாடுகளால் விபத்து அபாயம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செய்துங்கநல்லூர்: நெல்லை - தூத்துக்குடி நான்குவழிசாலையில் வல்லநாடு பகுதியில் மாடுகள் கும்பல் கும்பலாக ஆங்காங்கே  சாலையில் சுற்றிதிரிந்தும், படுத்துக்கொண்டும் சாலையை ஆக்கிரமிக்கின்றன. இந்த மாடுகளால் திடீரென மிரண்டு ஒன்றுடன்ஒன்று முட்டி மோதிக்கொள்வதால் அவ்வப்போது இருசக்கர வாகன ஓட்டிகள், கார்கள் சிறுசிறு விபத்துக்குள்ளாகின்றன.கடந்த மாதம் தமிழக முதல்வர் வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து நெல்லை வழியாக சேர்மாதேவி செல்வதற்காக வல்லநாடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மாடு குறுக்கே சென்றதால் முதல்வர் காருக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடித்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பல்வேறு துறை அரசு அதிகாரிகளும் தினம்தோறும் அவ்வழியாகச் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்ற விபத்துகளை தடுக்க சாலையில் மாடுகள் படுத்திருப்பதை அப்புறப்படுத்தவும், சாலையில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு காவல்துறையினர், பஞ்சாயத்து நிர்வாகம் இணைந்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும் ஆடு, மாடுகள் குறுக்கே வந்து விபத்துகளை ஏற்படுத்தாத வண்ணம் சர்வீஸ் சாலை மற்றும் நடுப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: