காய்க்கும் பருவத்தில் தொடர்மழை கொண்டைக்கடலை விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொண்டைக்கடலை செடிகளில், காய் பிடிக்கும் பருவத்தில் பெய்த தொடர் மழையால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, மொரப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதியில், 2500 ஏக்கரில் கொண்டை கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நான்கு மாத பயிரான இது, ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ மகசூல் தருகிறது. கடந்த மாதம் பூக்கள் பூத்து குலுங்கியது.

ஆனால், காய் பிடிக்கும் நேரத்தில் தொடர் மழை பெய்ததால், கொண்டை கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் போதிய மகசூல் கிடைக்காமல், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பனிப்பொழிவில் அதிக விளைச்சல் தரக்கூடிய கொண்டை கடலையை, விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்திருந்தனர். ஆனால், காய் பிடிக்கும் பருவத்தில் தொடர்ந்து பெய்ததால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்ப்பு இல்லாமல், வெறும் செடிகள் மட்டும் பச்சைபசேல் என்று உள்ளது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: