பழங்களை வெட்டி மண்ணில் போடும் விவசாயிகள் கம்பம் பகுதியில் தொடர் மழையால் கொடியிலேயே வெடித்தது திராட்சை : அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

கம்பம்: கம்பம் பகுதியில் தொடர் மழையால், கொடியிலே திராட்சை பழங்கள் வெடித்து அழுகியது. இதனால், விவசாயிகள் பழங்களை வெட்டி மண்ணில் போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ஆனைமலையான்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேரில் கறுப்பு பன்னீர் திராட்சையும், சின்னமனூர், ஓடைப்பட்டி பகுதிகளில் விதையில்லா பச்சை திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் கறுப்பு பன்னீர் திராட்சைகள் சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கும், கேரளாவில் உள்ள கோட்டயம், சங்கனாச்சேரி, எர்ணாகுளம், பாலா ஆகிய நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. திராட்சை விவசாயத்தில் மாவுப்பூச்சி தாக்குதல், கொடிகளில் இலை உதிர்வு, பூ கருகல், பிஞ்சு வெடித்தல், செவட்டை நோய் ஆகியவை மாறி, மாறி வந்தாலும் விவசாயிகள் உரம் மற்றும் மருந்து தெளித்து விவசாயத்தை காப்பாற்றுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் சுருளிப்பட்டி யானைகெஜம் பகுதியில், திராட்சைக் கொடிகளில் உள்ள பழங்கள் நீர்கோர்த்து வெடித்தது. இதனால் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால், விரக்தியடைந்த விவசாயிகள் பந்தலில் உள்ள திராட்சை பழங்களை வெட்டி மண்ணில் போடும் அவலம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து சுருளிப்பட்டி விவசாயி பொம்மையசாமி கூறுகையில், ‘இரண்டரை குழி நிலத்தில் திராட்சை சாகுபடிக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகியது. இடுபொருட்களும், 19 சதவீத ஜிஎஸ்டியுடன் மருந்துகளும் வாங்கி கொடியை உருவாக்கினோம். இந்த சீசனுக்கு வரத்து 8 முதல் 10 டன் இருக்க வேண்டும். தொடர் மழை காரணமாக திராட்சைக் கொடிகளில் பழங்கள் நீர்கோர்த்து வெடிக்கத் தொடங்கியது.

இதனால், சுமார் ரூ.20 ஆயிரத்துக்கு மட்டுமே பழம் வெட்டப்பட்டுள்ளது. பாக்கி பழங்களை வாங்க வியாபாரிகள் வராததால் கொடியிலேயே அழுகத் தொடங்கியது. அதனால் பழங்களை ஆட்களை வைத்து வெட்டி எறிந்தேன். அதற்கும் ரூ.5 ஆயிரம் செலவு செய்துள்ளேன். இப்பகுதியில் என்னைப்போல பல திராட்சை விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் திராட்சை விவசாயத்தை காப்பாற்ற மாநில அரசு, மானிய விலையில் உரங்கள், மருந்துகள் வழங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: