அகற்றப்பட்ட ஒரே நாளில் பழநியில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள்: பொதுமக்கள் முகம் சுளிப்பு

பழநி: பழநியில் அகற்றப்பட்ட ஒரே நாளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா நேற்று துவங்கியது.  இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரோடு மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் இக்கடைகளால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். போக்குவரத்து பாதிப்பும் அதிகளவு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தேவர்சிலை பகுதி மற்றும் சன்னதி வீதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரே நாளில் மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வாடகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளின் அருகிலேயே பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டுகொள்வதில்லையென கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரே நாளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: