சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை.: சந்தேகம் எழுப்பும் வழக்கறிஞர்

பெங்களூரு: சசிகலாவின் கொரோனா சோதனை முடிவு குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் வழக்கறிஞர் ராஜராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து விடுதலையாவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும்  மூச்சு திணறல் பாதிப்பு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் சசிகலாவுக்கு நுரையீரலில் சளி கட்டி இருப்பது தெரியவந்தது. இதனிடையில் சசிகலாவுக்கு ஆர்டிபிசிஆர் கோவிட்-19  பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து நிமோனியா காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டதால், விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து  24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதனிடையே சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை; சிறையில் கொரோனா நோயாளிகள் இல்லை என்று அவரது வழக்கறிஞர் ராஜராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு காய்ச்சல் இருந்தபோது அவருக்கு சிகிச்சையளிக்க ஒரு வாரமாக ஏற்பாடு செய்யவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகே சசிகலா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். ஸ்கேன் வசதி, போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத மருத்துவமனையில் சசிகலாவை அனுமதித்துள்ளனர் என வழக்கறிஞர் ராஜராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சசிகலாவின் விருப்பத்திற்கு இணங்க தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. சிறைத்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்தை தருகிறது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: