துணை அதிபர் கமலா ஹாரிசால் இந்தியா - அமெரிக்கா உறவு மேலும் பலப்படும்: வெள்ளை மாளிகை நம்பிக்கை

வாஷிங்டன்: ‘துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளதால்,  இந்தியா -  அமெரிக்கா உறவின் முக்கியத்துவம் மேலும் பலப்படும்,’ என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை  அதிபராக  தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிசும் பதவியேற்றுள்ளனர். அமெரிக்காவின் துணை அதிபராக முதல் முறையாக இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர் பதவி ஏற்றுள்ளதால், இந்தியா  உடனான உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜென் சாகி நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘பல முறை  இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் பைடன், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தலைவர்களுக்கு இடையிலான நீண்டகால வெற்றிகரமான உறவை மதிக்கிறார். இது தொடர வேண்டும் என்று விரும்புகிறார்.

 மேலும், துணை அதிபராக முதல் முறையாக இந்திய அமெரிக்கர் பொறுப்பேற்று இருப்பதும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வரலாற்று தருணம். கமலாவின் வருகையால், இந்தியா-அமெரிக்கா நட்புறவின் முக்கியத்துவம் மேலும் பலம்பெறும்’’  என்றார்.அதிபர் பைடன் தனது அமைச்சரவையின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பதவிகளில் இந்திய வம்சாவளியினரை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோ எல்லை சுவர் தடை போட்டார் பைடன்

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதாக டிரம்ப் அதிபரான உடனே அறிவித்தார்.  இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் இது தனது கனவு திட்டமாகவே  டிரம்ப் கருதினார். சுமார் ரூ.1 லட்சம் கோடியில் அமெரிக்காவை சுற்றி சுவர் எழுப்புவதே டிரம்ப்பின் திட்டம். இதில், 720 கிமீ தொலைவுக்கான சுவர் கட்டும் பணியை கடந்த ஆண்டு முடுக்கி விட்டார். இதற்கு ரூ.45 ஆயிரம் கோடி  செலவழிக்கப்பட்டுள்ளது. தான் பதவி விலகும் 8 நாளுக்கு முன்னர் 720 கிமீ சுவர் கட்டும் பணியை டிரம்ப் முடித்துவிட்டார். இதைத் தொடர்ந்து பைடன் பதவியேற்றதும் கையெழுத்திட்ட 17 உத்தரவில் மெக்சிகோ சுவர் பணிகளை  ஒருவாரத்திற்குள் நிறுத்துவதும் ஒன்றாகும். இதில் முடிக்கப்படாத பணிகள், நிலுவையில் உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்த பணத்தை வேறு நலத்திட்டங்களுக்கு செலவிட பைடன் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப்புடன் பைடன் பேசுவாரா?

முன்னாள் அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து, பைடன் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். அதோடு பல பாரம்பரியங்களையும் உடைத்த அவர், பைடனுக்கு திறந்த மடல் எழுதும் ஒரே ஒரு நல்ல விஷயத்தை மட்டும்  செய்துள்ளார். எனவே, ‘டிரம்ப்புடன் பைடன் போனில் பேசி நன்றி தெரிவிப்பாரா?’ என ஜெ சாகியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘அப்படி எதுவும் திட்டம் இல்லை. திறந்த மடலில் டிரம்ப் என்ன எழுதினார் என்பது தனிப்பட்ட  விஷயம். அது, டிரம்ப்பின் சம்மதம் இல்லாமல் பொதுவெளியில் கூற முடியாது. டிரம்ப்பின் கடிதத்தை பைடன் மதிக்கிறார். மற்றபடி அவருடன் பேசும் எண்ணம் எதுவுமில்லை,’’ என்றார்.

கொரோனா சவாலை எதிர்கொள்ளும் விதமாக அதிபர் பைடன் ‘100 நாள் மாஸ்க் சேலஞ்ச்’ உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள், அவர்கள் நாட்டிலேயே கொரோனா டெஸ்ட் சான்றிதழ்  பெற்று வர வேண்டும். அமெரிக்கா வந்ததும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது கட்டாயமாகி உள்ளது. 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>