×

செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சாலையோர பள்ளத்தில் ஆக்சிஜன் டேங்கர் லாரி கவிழ்ந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு

செங்கல்பட்டு: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆக்சிஜன் ஏற்றி சென்ற டேங்கர் லாரி, திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில்  இருந்து புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஏற்றி கொண்டு ஒரு டேங்கர் லாரி ேநற்று காலை புறப்பட்டது. சென்னையை சேர்ந்த டிரைவர் தங்கமணி (45) லாரியை ஓட்டி சென்றார். சென்னை - திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர தடுப்பு சுவரை இடித்து தள்ளி கொண்டு, ஏரிக்கு அருகே 20 அடி  பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர், உயிர் தப்பினார்.தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், 2 ரெக்கவரி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு,  பத்திரமாக மீட்டனர். இந்த திடீர் விபத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது.

தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர். விபத்து நடந்த பகுதியை சுற்றி காப்புக்காடு மற்றும் ஏரி உள்ளது. சிறிது தீ விபத்து அசாம்பாவிதம் நடந்து  இருந்தாலும், காடு முழுவதும் தீக்கு இரையாகி இருக்கும். ஆனால், பலத்த பாதுகாப்புடன், டேங்கரை சீல் வைத்து கொண்டு வந்ததால், எவ்வித அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், விபத்தில் சிக்கிய  டேங்கர் லாரி வெடித்து இருந்தால் சுற்றுவட்டாரத்தில் சுமார் 1 கிமீ தூரம் வரை பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும். காப்புக்காட்டில் தீ பரவி, அங்குள்ள மான், பாம்பு, குரங்குகள், நரி உள்பட பல்வேறு விலங்களும் பாதிப்படைந்து இருக்கும்.  ஆக்சிஜன் டேங்கர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.Tags : Chengalpattu , Excitement near Chengalpattu: Oxygen tanker truck overturns in roadside ditch: Major accident avoidance
× RELATED தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில்...