வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஊரடங்கை தளர்த்தியும் தொடரும் சோகம்

காஞ்சிபுரம்: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (34). காங்கேயநல்லூரை சேர்ந்தவர் தீபா (30). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில்  வாடகைக்கு வீட்டில் குடும்பம் நடத்தினர். இவர்களுக்கு 2 வயது மற்றும் 7 மாதத்தில் 2 குழந்தைகள் உள்ளன். ஆனந்தராஜ் அதே பகுதியில் உள்ள சிக்கன் சென்டரில் வேலை செய்கிறார். கொரோனா காரமணாக கடந்த 7 மாதமாக  ஆனந்த்ராஜிக்கு வேலை இல்லை. இதனால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கடும் சிரமம் அடைந்தனர். இதில் 7 மாத குழந்தைக்கு காது கேட்காத பிரச்னை ஏற்பட்டது. அதன் மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் வேதனையில்  இருந்தனர். இதையொட்டி கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஆனந்த்ராஜ் வேலைக்கு சென்றார். பின்னர் தீபா, பிள்ளைகளை வெளியே விளையாட அனுப்பிவிட்டு, அங்கிருந்த மண்ணெண்ணெயை உடல் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவி அவர் அலறி  துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து அவரை மீட்டனர். அதற்குள், அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை  கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: