வாலாஜாபாத் பேரூராட்சியில் முட்புதராக மாறிய சிறுவர்கள் பூங்கா: விளையாட்டு உபகரணங்கள் மாயம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி பூங்கா, முட்புதராக மாறிவிட்டது. இங்கிருந்த விளையாட்டு உபகரணங்கள் மாயமாகிவிட்டன. இதனை சீரமைத்து குழந்தைகளும், முதியவர்களும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி 14வது வார்டு தனலட்சுமி நகரில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  இப்பகுதியில் அங்கன்வாடி மையம், நியாய விலை கடை ஆகியவை இயங்குகின்றன.  இதன் அருகில்,  அப்பகுதி மக்களுக்காக பூங்கா ஒன்று இருந்தது.   இந்த பூங்காவில், இப்பகுதியை சுற்றியுள்ள  குழந்தைகள் விளையாடுவார்கள். இதற்காக  ஊஞ்சல், சறுக்கு மெத்தை உள்பட பல்வேறு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

இந்தவேளையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக.  இந்த, பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் நாளுக்கு நாள் காணாமல் போயின. தற்போது பூங்கா முழுவதும்  முட்புதர்களாக காணப்படுகிறது. இதனால், சிறுவர்கள் விளையாட செல்லாமலும், முதியோர் நடைபயிற்சி செல்லாமலும் சிரமம் அடைந்துள்ளனர்.

  இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரூராட்சி பூங்காவில்  மாலை நேரங்களில் முதியவர்கள் நடைபயிற்சி செய்வதும், குழந்தைகள் இங்குள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடுவது வழக்கமாக இருந்தது.   இதனை, பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், பூங்காவை சுற்றியுள்ள கம்பிவேலிகளும், விளையாட்டு உபகரணங்களும் மாயமாகிவிட்டன. தற்போது, இந்த பூங்கா முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால், அதில் பாம்பு  உள்பட பல்வேறு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதையொட்டி, அங்கு பிள்ளைகளை அனுப்ப அச்சமடைந்துள்ளோம். இரவு நேரங்களிலும், மழை காலங்களிலும், பூங்காவின் முட்புதரில் இருந்து, விஷப்பூச்சிகள் வீடுகளில்  புகுந்துவிடுகின்றன. இதனை தடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: