காட்டுப்பள்ளி அதானி துறைமுக பிரச்னையில் மக்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்: சுற்றுச்சூழல் அணி செயலாளர் பேட்டி

சென்னை: காட்டுப்பள்ளி அதானி துறைமுக பிரச்னையில் பொதுமக்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்று திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர்  கார்த்திகேய சிவ சேனாபதி கூறியுள்ளார்.  சென்னை காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இத்திட்டத்திற்கு பொதுமக்கள், மீனவர் குடும்பங்கள், சூழலியல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர்  கார்த்திகேய சிவசேனாபதி சென்னையில் நேற்று  அளித்த பேட்டியில், ‘‘காட்டுப்பள்ளி பகுதியில் அதானியின் துறைமுக விரிவாக்கத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சுற்றுச்சூழலுக்கான பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.  அதனை கருத்தில் கொண்டு காட்டுப்பள்ளி மக்களிடையே உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து  அவர்களுக்கு திமுக உறுதுணையாக நிற்கும். காட்டுப்பள்ளி  மக்கள்  போராடினால்  திமுக துணைநிற்கும்’’ என்றார்.

திருமாவளவன் பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று செங்கழுநீர்மேடு கிராமத்தில் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில்,  ‘‘அதானி துறைமுகம் விரிவாக்கத்தை கைவிட நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது குறித்து கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.  கலெக்டரிடம் புகார் மனு: கலெக்டர் பொன்னையாவிடம் பழவேற்காடு பகுதி மக்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ‘‘பழவேற்காடு லைட்ஹவுஸ் குப்பம் ஊராட்சியில் அடங்கிய கடலோர 13 மீனவ கிராமங்களில் 15,000 மீனவ மக்களும், பழவேற்காடு மீனவ கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகிறோம்.

எங்கள்  பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் 6,111 ஏக்கர் நிலத்தில் அதானி துறைமுகம் விரிவாக்கம் ஏற்படுத்தினால் எங்கள் பகுதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். காட்டுப்பள்ளியில் அதானியின் மெகா துறைமுகம் சட்டவிரோதமானது.  துறைமுக திட்டம் காட்டுப்பகுதியில் தடைசெய்யப்பட்ட செயல்பாடாகும். முன்மொழியப்பட்டுள்ள சட்டவிரோதங்களை கண்டுகொள்ளாமல் மக்கள் கருத்துகேட்பு கூட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்த இருப்பது மிகவும் வேதனைக்குரியது.  எனவே, கடலோரம் வாழும் எங்கள் மக்களின் மீது கருணை வைத்து இத்திட்டத்தை அறவே தடை செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: