அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா? மத்திய அரசுக்கு வைகோ கேள்வி

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும்  வகையில் புதுச்சேரி அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  சங்கரநாராயணன் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவில், “‘ஒரே நாடு; ஒரே மெரிட்’ என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் தரவரிசை மேற்கொள்ளப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டு உள்ளது.  அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இடஒதுக்கீடு வழங்கினால் அது கல்வித் தரத்தைப் பாதிக்கும் என்று கூறி இருக்கிறார்.

புதுச்சேரி அரசின் தீர்மானப்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, சமூக நீதிக்கு  சாவுமணி அடிக்கும் மத்திய பாஜ அரசுக்கு பாதம் தாங்கியாகச் செயல்படும் அதிமுக அரசுக்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

Related Stories: