அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரோகங்களுக்கு விலை போகாதீர்கள்: முதல்வர் எடப்பாடி பேச்சால் பரபரப்பு

சென்னை: அதிமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர், `துரோகங்களுக்கு விலை போகாதீர்கள்’ என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18ம் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து 19ம் தேதி காலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதிமுக -  பாஜ கூட்டணி குறித்தும், பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.  இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடி, வருகிற 27ம் தேதி விடுதலையாக உள்ள சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று் கூறினார்.

 இந்த நிலையில், நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் காலை 11 மணிக்கு முடிந்து மாவட்ட செயலாளர்கள் புறப்பட்ட சென்றனர். அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி,  வேலுமணி, ஜெயக்குமார், கொறடா ராஜேந்திரன் உள்ளிட்டோர் சுமார் ஒரு மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.  இந்த கூட்டத்தில், ஜெயலலிதா நினைவிடம் வருகிற 27ம் தேதி திறந்துவைக்க இருப்பதை முன்னிட்டு அதற்காக ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது சம்பந்தமாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்கியதாக அதிமுக தலைமை கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 மேலும் இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசும்போது, “தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ உள்ளிட்ட எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, அப்படியே கூட்டணி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்  வழங்கலாம் என்பது குறித்தும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கட்சி தலைமைக்கு தனிப்பட்ட முறையில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கேட்டு கொண்டார்.  ஜெயலலிதா நினைவிடம் திறக்கும் நாளான 27ம் தேதி தான் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தாலும், 27ம் தேதி விடுதலையாவது உறுதி என்றே  கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் யாரும் துரோகங்களுக்கு விலை போகாதீர்கள். சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றுங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி  உத்தரவிட்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார்.  சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அதிமுகவினர் சிலர் அவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி இப்படி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: