அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை 28ம்தேதி முதல் பார்க்க அனுமதியா?

சென்னை: ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை வருகிற 28ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த நினைவு இல்லம் வருகிற 28ம் தேதி திறக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனாலும் தமிழக  அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், சென்னை எழும்பூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதல் காதல்,  புத்தகங்கள் மீதுதான். அந்த வகையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இந்த வேதா இல்லம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வருகிற 28ம் தேதி (வியாழன்)  திறக்கப்பட உள்ளது. இதுதவிர ஜெயலலிதாவின் நினைவு இல்லம் வருகிற 27ம் தேதி திறக்கப்படுகிறது. அந்த இடத்தில் ஜெயலலிதா அறிவு மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, “ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறப்பு குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா இல்லத்தில் அவரை கவர்ந்த சுமார் 15 ஆயிரம்  புத்தகங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகளும் வேதா இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கும். ஜெயலலிதாவின் நினைவு இல்லம் எல்லோரும் காணவேண்டிய இடமாக  இருக்கும்” என்றார்.

மேடையில் பேசும்போது, வேதா இல்லம் 28ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்றார். நிகழ்ச்சி முடிந்த வெளியே பேட்டி அளிக்கும்போது விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Related Stories: