சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்: சென்னைக்கு 1,69,920 கோவாக்சின் வருகை

சென்னை: ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  நேற்று கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.  தமிழகத்தில் மொத்தம் 6 லட்சம் சுகாதார துறை பணியாளர்ளுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த  வாரம் தமிழகம் வந்தது.  தமிழகம் முழுவதும் உள்ள 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழகத்தின் 10 தலைசிறந்த மருத்துவர்கள் தடுப்பூசி போட்டு  கொண்டனர். அதன்படி தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளும் 42,947 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும்,  பயத்தை போக்கும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. மேலும் கடந்த வாரம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதையடுத்து சென்னை  ராஜிவ்காந்தி அரசு மருத்துவனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.  பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி மையத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். அமைச்சராக அல்ல மருத்துவராக ஐஎம்ஐ உறுப்பினராக  எடுத்துக் கொண்டேன்.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், தடுப்பூசி போடுவதில் யாருக்கும் தயக்கம் இருக்கக்கூடாது என்பதற்காக எடுத்துக் கொண்டேன்.    1,69,920 கோவாக்சின் இன்று சென்னைக்கு வரவுள்ளது. 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 42,947 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் முன்களப்பணியாளர்கள் போட்டுக்கொள்வார்கள்.  இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Related Stories:

>