அதிமுகவுக்கு துணைபோகும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக சார்பில் மனு

சென்னை: அதிமுகவுக்கு துணை போகும் தமிழக அரசு அலுவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வில்சன் எம்பி ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவை சந்தித்து திமுக சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:  எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்ற தனது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி, அதிமுக கட்சியின் சார்பாக தயாரிக்கப்பட்ட 60 வினாடிகள் ஓடுகின்ற விளம்பரத்தை வெளியிட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் தமிழக அரசின்  நிதியிலிருந்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மக்கள் வரிப்பணத்தை அதிமுகவின் தேர்தல் லாபத்திற்காகவும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக  முன்னிலைப்படுத்துவதற்காகவும் வீணாகச் செலவிட்டு வருகின்றனர்.

 மக்களின் வரிப்பணத்தை தனிநபரின் நலனுக்காகவும் அரசியல் கட்சியின் நலனுக்காகவும் பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. இந்திய தேர்தல் ஆணையம் 07.10.2016ம் தேதியன்று வெளியிட்டிருக்கின்ற விதிமுறைகளின்படி  இவைகள் அனுமதிக்கப்பட கூடாது. ஏற்கனவே கடந்த 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு சுமார் 4.56 லட்சம் கோடி கடனில் இருக்கின்ற சூழ்நிலையில், அதனை இன்னும் கூட்டுகின்ற வகையில் சுமார் ஆயிரம் கோடி  செலவில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆகவே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்ற விதிமுறைகளின்படி அதிமுகவின் மீதும்; அதன் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கின்ற முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம், இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடாமல் உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். நியாயமான, நேர்மையான, அனைத்துக்  கட்சிகளுக்கும் சமமான முறையில் வாய்ப்பளிக்கும் முறையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ் நாட்டில் தேர்தலை நடத்த உறுதிப்படுத்த வேண்டும்.

இதுவரை தமிழக அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவுத் தொகை குறித்த முழு விபரத்தையும் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு; அதுகுறித்து விரிவான விசாரணையை நடத்த வேண்டும். அதன்  அடிப்படையில் அரசு பணத்தை  தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்திய ஆளும் அதிமுகவின் மீதும்; அதற்கு துணை போன தமிழக அரசு அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>