விஞ்ஞானிகள் பரிந்துரைப்படியே தடுப்பூசி போடப்படுகிறது: பிரதமர் மோடி தகவல்

லக்னோ: கொரோனா தடுப்பூசி மீதான அச்சத்தை போக்கும் வகையில், வாரணாசியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி  போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும், தடுப்பூசி குறித்த அச்சம்  மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால், பதிவு செய்த சுகாதாரப் பணியாளர்கள் கூட பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவதில்லை. இதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து  வருகிறது.

இதன் ஒரு அம்சமாக, பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட டாக்டர்கள், நர்ஸ்கள், லேப் டெக்னீசியன்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங்  மூலம் 30 நிமிடங்கள் பேசினார். முதல் முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்தார். தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அனைவரும், தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என மகிழ்ச்சி  தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘நமது டாக்டர்களும், சுகாதார பணியாளர்களும் நற்சான்றிதழ் தந்துள்ளதன் மூலம் தடுப்பூசியின் திறன் குறித்து மிக வலுவான செய்தி மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்த கலந்துரையாடல் மூலம்  அவர்களின் அனுபவத்தை அறிவதோடு, தடுப்பூசி குறித்த கருத்துக்களையும் பெறும் வாய்ப்பாக அமைந்துள்ளது. விஞ்ஞானிகள் பரிந்துரை படியே தடுப்பூசி வழங்கும் பணி நடக்கிறது’’ என்றார்.

12.72 லட்சம் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

*  நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிய நாள் முதல் நேற்று வரை தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 12.72 லட்சத்தை கடந்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 6,230 தடுப்பூசி போடும் மையங்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 563 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 397 முறை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது.

சீரம் நிறுவனத்துக்கு 1000 கோடி இழப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் புேனவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். கட்டிடங்கள், மருந்து தயாரிப்பு இயந்திரங்கள் நாசமாகின. இந்த தீ விபத்தால் சீரம்  நிறுவனத்துக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

அன்றாட வாழ்க்கையில் ஆத்மநிர்பார் ஒரு அங்கம்

அசாம் மாநிலம், தெஸ்பூர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலமாக பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசுகையில், ‘‘ஆத்மநிர்பார் பாரத் எனப்படும் சுயசார்பு இந்தியா என்பது தொழில்நுட்ப முன்னேற்றங்கள்,  செயல்முறையை சார்ந்தது மட்டும் கிடையாது. நாட்டின் அன்றாட வாழக்கையின் ஒரு பகுதியாக மாறி விட்டது. நமது கிரிக்கெட் வீரர்கள் சவால்களை துணிவோடு எதிர்கொண்டனர். காயங்கள், அனுபவமின்மை இருந்த போதும் புதிய  தீர்வுகளை கொண்டு வந்தனர். கொரோனாவுக்கு எதிரான நமது நிர்வாக மேலாண்மையும், எங்கு உறுதியும், விரைவில் மீளும் திறன் நம்மிடம் இருந்தால் வாய்ப்புக்கள் இயற்கையாக வரும். அதன் எதிரொலியாக  இன்று நாடு முழுவதும்  மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகின்றது,’’ என்றார்.

Related Stories: