கொல்கத்தா உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: கணவன் விந்தணு மீது மனைவிக்கு மட்டுமே உரிமை: தந்தை கூட கேட்க முடியாது

கொல்கத்தா: ‘இறந்தவருடைய விந்தணு மீது அவரது மனைவிக்கு மட்டுமே முழு உரிமை உண்டு. இறந்தவரின் தந்தை கூட உரிமை கோர முடியாது,’ என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. டெல்லி பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்ற கொல்கத்தாவை சேர்ந்த வாலிபருக்கு தலசீமியா என்ற அபூர்வ நோய் இருந்தது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அழிக்கும் உயிர்க்கொல்லி நோயாகும். இந்த நோய்க்காக அவர் டெல்லி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். டாக்டர்களிடம் ஆலோசித்த பிறகு அவருக்கு கடந்த 2015ல் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய அந்த வாலிபர், 2018ல் திடீரென மரணம் அடைந்தார். திருமணமாகி 3 ஆண்டாகியும் குழந்தை பிறக்காத அந்த வாலிபரின் விந்தணு, டெல்லி மருத்துவமனை விந்தணு வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 இந்த விந்தணு மூலமாக தங்கள் குடும்பத்தின் வாரிசை உருவாக்க இறந்த வாலிபரின் தந்தை முயன்றார். ஆனால், விந்தணுவை அவரிடம் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.  இறந்தவருடைய மனைவியின் ஒப்புதல் இன்றி விந்தணுவை வழங்க முடியாது என கூறி விட்டது. இது குறித்து வாலிபரின் குடும்பத்தினர் கேட்டதற்கு, கணவனின் விந்தணுவை வழங்க  அவரது மனைவியும் மறுத்து விட்டார்.  இதனால், தந்தை என்ற முறையில் விந்தணுவை பெற உரிமை கோரியும், தனது மருமகளின் விருப்பத்தை கேட்டறிய உத்தரவிடக் கோரியும் வாலிபரின் தந்தை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அதில், ‘எனது  மகனின் விந்தணுவை உரிய காலத்தில் பயன்படுத்தா விட்டால் அது அழிந்துவிடும். மருத்துவமனை உடனான ஒப்பந்தம் முடிந்தாலும், விந்தணுவை பயன்படுத்த முடியாமல் எங்கள் குடும்பம் வாரிசே இல்லாமல் போய்விடும்.  எனவே, தந்தை என்ற முறையில் விந்தணுவை பெற அனுமதி வழங்க வேண்டும்,’ என்று அவர் கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சப்யாசாச்சி பட்டாச்சார்யா மனுவை தள்ளுபடி செய்தார். அவர் தனது உத்தரவில், ‘‘தந்தையானாலும் மகனின்  விந்தணு மீது உரிமை கோரி முடியாது. இறந்தவருடைய விந்தணுவுக்கு முழு உரிமையாளர்  அவரது மனைவி மட்டுமே. இந்த விவகாரத்தில் இறந்தவருடைய மனைவியின் விருப்பமே இறுதியானது. எதற்காகவும் அவரை கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனவே, மனு  தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என கூறி உள்ளார்.

Related Stories: