தனியார் நிதி நிறுவன ஊழியர்களை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 7.5 கோடி நகை, பணம் துணிகர கொள்ளை: 5 பேர் மர்ம கும்பல் அட்டூழியம்: ஓசூரில் பட்டப்பகலில் துணிகரம்

ஓசூர்: ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று காலை பட்டப்பகலில் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த 7.5 கோடி மதிப்பிலான 3,000 சவரன் தங்க நகைகள் மற்றும் 96 ஆயிரம்  பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-பாகலூர் சாலையில் தனியார் நிதிநிறுவனம் வாடகை கட்டிடத்தில் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் தங்க நகைகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில்  மேலாளராக சீனிவாச ராகவா பணியாற்றி வருகிறார். இதேபோல், மாருதி (24), பிரசாந்த் (29) ஆகியோர் ஊழியர்களாகவும், ராஜேந்திரன்(55) என்பவர் செக்யூரிட்டியாகவும் பணியாற்றி வருகின்றனர்.  நேற்று காலை சுமார் 10 மணியளவில் சீனிவாச ராகவா, மாருதி, பிரசாந்த், ராஜேந்திரன் ஆகியோர் நிதி நிறுவனத்தை திறந்து உள்ளே சென்றனர். சிறிதுநேரத்தில், நகைகளை அடமானம் வைக்க 3 வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர்.  

அந்த  சமயத்தில் 2 நபர்கள் ஹெல்மெட் அணிந்து அலுவலகதுக்குள் நுழைந்தனர். அவர்கள் வாடிக்கையாளர்போல் இருந்ததால் யாரும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. அவர்களை பின்தொடர்ந்து   மேலும் 3 பேர் வந்தனர். அவர்களிடம், துப்பாக்கி,  கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பதற்றமடைந்தனர். இதையடுத்து, நிறுவனத்தின் கேட்டை உள்பக்கமாக சாத்திய கொள்ளையர்கள் அனைவரையும் மிரட்டி அமர வைத்து கைகளை  கட்டி அனைவரது வாயிலும் பிளாஸ்திரி ஒட்டினர்.  பின்னர், ஊழியர்களை தாக்கி லாக்கரின் சாவியை பெற்றுக்கொண்டு லாக்கர்களில் இருந்த சுமார் 7.5 கோடி மதிப்பிலான 3,000 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹96 ஆயிரம் ஆகியவற்றை, அவர்கள் கொண்டு வந்திருந்த பையில் போட்டு  கொண்டனர்.

அப்போது, நிறுவனத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள், கேட் பூட்டியிருந்ததால் உள்ளே எட்டிப் பார்த்தனர். அங்கு கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் இருப்பதை பார்த்து உடனடியாக அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் பைகளை  எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் வெளியே வந்து டூவீலர்களில் ஏறி தப்பிச்சென்றனர்.  இதையடுத்து, நிறுவனத்தின் உள்ளே சென்ற வாடிக்கையாளர்கள், அங்கிருந்த ஊழியர்களின் கட்டுகளை அவிழ்த்து விடுவித்தனர். இதனிடையே, தகவலறிந்து விரைந்து வந்த அட்கோ போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை  நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்.பி. பண்டிகங்காதர் விசாரணையை முடுக்கிவிட்டார்.

 கொள்ளை சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

காலையில், நிறுவனத்தை திறந்தபோது வாடிக்கையாளர்கள் போல் வந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அந்த கும்பலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அவர்கள் 5 பேரும் டூவீலரில் வந்திருக்கலாம்.  சம்பவத்தை பார்த்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்டவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். 25 கிலோ எடை கொண்ட ₹7.50 கோடி மதிப்பிலான 3,000 சவரன் நகைகள் மற்றும் ₹96 ஆயிரம்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு எஸ்.பி. கூறினார்.  கொள்ளை குறித்து தகவலறிந்த அடகு வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது

ஏற்கனவே வங்கியில் 13 கிலோ கொள்ளை

கடந்த 24.1.2015-ம் தேதி கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே ராமாபுரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துளையிட்ட கும்பல் அங்கிருந்த 13 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதில், 5 பேர் கைது  செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து நகைகள் இதுவரை மீட்கப்படவில்லை. இதேபோல், கடந்தாண்டு அக்டோபர் 22ம் தேதி சென்னையிலிருந்து மும்பைக்கு செல்போன்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியை சூளகிரி அடுத்த மேலுமலையில் மடக்கிய மர்ம கும்பல் அதிலிருந்த ₹15 கோடி மதிப்புள்ள செல்போன்களை  கொள்ளையடித்து சென்றது. இதில், தொடர்புடைய 10 பேரை மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீசார் கைது செய்தனர். ஆனால், அவர்கள் கொள்ளையடித்த செல்போன்கள் இதுவரை மீட்கப்படவில்லை. தற்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

வாயில் பிளாஸ்திரி ஒட்டி உட்கார வைத்தனர்

கொள்ளை சம்பவத்தை நேரில் பார்த்த ராஜி என்பவர் கூறுகையில், ‘நான் நிறுவனத்திற்கு சென்றிருந்தபோது கொள்ளையர்கள் உள்ளே வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டினர். நான் உள்பட 4 வாடிக்கையாளர்கள் மற்றும் மேலாளர், ஊழியர்கள்  அனைவரையும் மிரட்டி கை மற்றும் வாயில் பிளாஸ்திரி ஒட்டி உட்கார வைத்தனர். பின்னர் எங்களிடமிருந்து செல்போன் மற்றும் வாட்சுகளை பிடுங்கினர். அனைவரது வாட்சுகளையும் அடித்து நொறுக்கி, அமைதியாக இருந்தால் எதுவும்  செய்ய மாட்டோம் என மிரட்டினர். நாங்கள் பயத்துடன் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். அப்போது, அவர்கள் கொண்டு வந்த 3 பெரிய பேக்குகளில் பணம், நகைகளை அள்ளிப் போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர்,  நிறுவனத்திற்கு வந்த மற்ற வாடிக்கையாளர்கள் எங்களது கட்டுகளை அவிழ்த்து விட்டனர்’ என்றார்.

Related Stories: