விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி: திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி என அறிவிப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நேற்று நடத்திய 11ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால், திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்  என்று விவசாய சங்கங்கள் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை  ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உபி. உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 58 நாட்களாக முற்றுகை போராட்டம் நடத்தி  வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே ஏற்கனவே நடந்த 10 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தற்போது, இந்த சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு சில நாட்களுக்கு முன் 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில்,   இச்சட்டங்களை ஒன்றரை வருடங்களுக்கு ஒத்திவைப்பதாகவும், இரு தரப்பும் இடம் பெறும் கூட்டுக் குழுவை அமைத்து பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றும் மத்திய அரசு யோசனை தெரிவித்தது. இது பற்றி விவசாய சங்கங்களின்  பிரதிநிதிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில் மத்திய அரசின் யோசனையை நிராகரிப்பதாக அறிவித்தனர். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என அவர்கள் பிடிவாதமாக தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அரசு - விவசாய சங்கங்கள் இடையிலான 11வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று மதியம் ஒரு மணிக்கு டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இதில். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே  அமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச்சர் சோம் பர்காஷ், 41 விவசாய சங்க பிரதிநிதிகள்

பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.  ஆனால், இதற்கு முந்தைய பேச்சுவார்த்தைகளுக்கு மாறாக இந்த முறை கடுமையாக்கி இருந்தது. இதனால், எந்தவொரு  முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சர் தோமர் அளித்த பேட்டியில், “சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் பிடிவாதமாகக் கூறினார்கள். இதனால் 11ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும்  எட்டப்படவில்லை.   வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்கும் அரசின் முடிவு குறித்து பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசித்து முடிவெடுத்த பின்னர், அரசுக்கு தெரிவித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதற்காக அவர்களுக்கு நாளை  (இன்று) ஒருநாள் அவகாசம் அளிக்கப்படுகிறது.  நாளைக்குள் முடிவெடுத்து தெரிவித்தால் மட்டுமே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். விவசாயிகள் விரைவில் அரசின் முடிவை ஏற்று கொள்வார்கள் என நம்புகிறோம். விவசாயிகளின்  இறுதி முடிவுக்காக நாளை (இன்று) வரை அரசு காத்திருக்கும்,” என்றார்.

இதனால், டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.  3½ மணி நேரம் காத்திருப்பு: ‘பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன், அமைச்சர்கள் எங்களை மூன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து விட்டனர். இது எங்களுக்கு நேர்ந்த அவமானம். அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்கும்படி  மட்டுமே அவர்கள் கேட்டு கொண்டனர். அத்துடன் பேச்சுவார்த்தையை முடித்து விட்டனர்’ என்று கிசான் மஸ்தூர் சங்க தலைவர் பந்தர் தெரிவித்தார்.

மீண்டும்  பரிசீலியுங்கள்

பாரதிய கிசான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாய்ட் கூறுகையில், “வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து கூறிய பின்பும், அமைச்சர்கள் அரசின் தற்காலிக ஒத்திவைப்பு  முடிவை மீண்டும் பரிசீலிக்கும்படி  கேட்டுக் கொண்டனர். இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்,” என்றார்.

Related Stories: