தெலங்கானாவில் பாஜக வளர்ச்சியை தடுக்க முதல்வர் பதவியை துறக்க சந்திரசேகர ராவ் முடிவு?..மகனை முதல்வராக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பாஜ காலூன்றி வருவதால் தனது கட்சியை பலப்படுத்தும் வகையில், தெலங்கானா முதல்வர் பதவியை  துறக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாகவும், தனது மகனை முதல்வராக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், தற்போது மாநிலத்தின் முதல்வராக உள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகன் கே.டி. ராமாராவிற்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கினார். அதன்பின், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ராமாராவே கவனித்து வருகிறார்.

சந்திரசேகர ராவின் மகள் கவிதா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், 2019ல் நடைபெற்ற தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அதன் பின்னர்தான் கவிதாவிற்கு தற்போது மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதனைபோல், முதல்வர் சந்திரசேகர ராவின் அக்கா மகன் ஹரீஷ் ராவும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். மேலும், அமைச்சரவையில் தற்போது அமைச்சராகவும் உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 44 வார்டுகளில் வெற்றி பெற்று 2வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த முடிவெடுத்துள்ள சந்திரசேகர ராவ், தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள தனது மகன் ராமாராவை, முதல்வர் நாற்காலியில் அமரவைக்க திட்டமிட்டுள்ளார்.

அதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. ராமாராவை முதல்வராக அமர வைப்பதற்கு கட்சியின் மூத்தவர்களான ஈடல ராஜேந்தர் உள்ளிட்டோரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து மாநில கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் தலசானி சீனிவாஸ் யாதவ் கூறுகையில், ‘முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது மகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. கட்சியின் செயல் தலைவராக உள்ள கேடிஆர் (ராமராவ்) மாநில முதல்வரானதில் தவறில்லை. கே.சி.ஆர் சரியான நேரத்தில் முடிவெடுப்பார். கடந்த ஆறு ஆண்டுகளில் அவரது அனைத்து முடிவுகளும் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: