மணமேல்குடி அருகே வாரியில் பாலம் கட்டும் பணி நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் செல்லும் குடுவையூர் மக்கள்

அறந்தாங்கி: மணமேல்குடி அருகே வாரியில் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இடுப்பளவு தண்ணீரில் சிரமப்பட்டு சென்று வரும் கிராம மக்கள் அத்தியவாசிய பொருட்களை வாங்கி வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் அரசியல் குருவாகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும், சுதந்திர போராட்ட தியாகியாகவும் விளங்கிய தீரர் சத்தியமூர்த்தியின் பூர்வீகத்தினu; வாழ்ந்த ஊராக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் குடுவையூர் விளங்கி வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடுவையூருக்கு ஆவுடையார்கோவிலில் இருந்து கோட்டைப்பட்டினம் செல்லும் சாலையில் சென்று குடுவையூர் ஆலங்கன்னு பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்ல வேண்டும்.

வழியில் வாரியை கடந்து தான் செல்லவேண்டும். மழைக்காலங்களில் வாரியில் தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர் கழுத்தளவு தண்ணீரில் மிகுந்த சிரமத்துடனே ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு குடுவையூர் செல்லும் சாலை அமைக்க சுமார் ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தன. குடுவையூர் சாலையை, கோட்டைப்பட்டினம் மெயின் சாலையுடன் இணைத்து  பாலம் அமைக்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால், தற்போது அப்பகுதியில் பாலம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

50 சதவீதத்திற்கு மேல் பணி முடிந்த நிலையில்  மழை காரணமாகவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குடுவையூருக்கு சாலை அமைக்கப்பட்ட போதிலும் பாலம் அமைக்காவிட்டால், எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. தற்போது வாரியில் அதிக அளவு தண்ணீர் செல்லவதால், அப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவியர் ஊரில் இருந்து வெளியூருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு கழுத்தளவு தண்ணீரில் நீந்தி சென்று வருகின்றனர். தற்போது தண்ணீர் குறைந்துள்ளதால் இடுப்பளவு தண்ணீரில் சென்று வருகின்றனர். எனவே பாலத்தை கட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: