சட்டம் அறிவோம்!

நன்றி குங்குமம் தோழி

பெண்களை காக்கும் சிறப்பு சட்ட உரிமைகள்  

சமையல் அறையில் கட்டுப்பட்டு வாழ்ந்த காலம் மாறி இப்போது பெண்கள் தங்களுக்கு என ஒரு நிலையை அடைந்துள்ளனர். படிப்பது, வேலைக்கு செல்வது என்று இருக்கும் இவர்களில் எத்தனை பேருக்கு தங்களுக்கான உரிமைச் சட்டங்கள் இருக்கிறது என்று தெரிந்துள்ளது. பல பெண்களுக்கு அப்படி ஒரு சட்டம் உள்ளதா என்று கூட தெரிவதில்லை. தமக்கான உரிமைகளைக் கூட அறியாமல் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பெண்கள் பலர் உள்ளனர். அப்படி ஒரு சட்டம் இருப்பது பற்றி தெரிந்து இருந்தாலும், அதில் உள்ள சலுகைகள் மற்றும் சட்டத் திட்டங்கள் பற்றி படித்த பல பெண்களுக்கு தெரிவதில்லை.

அறிவே ஆற்றல் தரும் என்பதால் பெண்களுக்கான சட்ட நலன்களைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கட்டுரை. சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருபது ஆண்டுகளாக பணியாற்றி வரும் விஜயலட்சுமி, பெண்களை காக்கும் சட்டங்கள் பற்றி விரிவாக தெரிவித்தார். ‘‘நம் பெண்களில் பலருக்கு அரசாங்கம் அளிக்கும் சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனால் தான் தங்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது அதை சமாளிக்க முடியாமல் சித்ரவதையை அனுபவித்து மௌனமாக வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் அவர்களை காக்க சட்டத்தில் உரிமைகள் உள்ளன. அது என்ன என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது அவசியம்.  

* இலவச சட்ட உதவிக்கான உரிமை

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட சலுகை இது. அவர்கள் தங்கள் உரிமைக்காக போராட சட்டம் அவர்களுக்கென இலவச சேவை வழங்குகிறது. இது பெண்கள் தாமாக முன்வந்து தங்களின் துயரத்திற்கு நியாயம் தேடுவதற்கான சலுகை. இந்த சட்டத்தில் பெண்கள் தங்களின் பிரச்சனைகளை புகார்களாக நேரில் சென்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக காவல்துறை, போலீஸ் கமிஷனர் அல்லது துணை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்கலாம். பின்பு, இந்த புகார் உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு உரிய விசாரணைக்குப் பின் வழக்கு பதிவு செய்யப்படும்.                                                                             

* குடும்ப வன்முறைச் சட்டம் (2005)

இது மகளிரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்டம். நம் குடும்ப கட்டமைப்புகள் ஆண்களுக்கு சாதகமான ஒரு அமைப்பாகவே இருந்து வந்துள்ளது. பெண்கள் அதிகம் வீட்டில் தான் புண்படுத்தப்படுகின்றனர். அடித்து உதைத்து துன்புறுத்துவது மட்டும் வன்முறையாகாது. வீட்டில் பூட்டி வைத்து, உணவு கொடுக்காமல், வெளியே செல்ல அனுமதிக்காமல் துன்புறுத்துதலும், தினம் வசைப்பாடி அவமானப்படுத்துவதும், பயமுறுத்துதலும் கூட வன்முறைதான். இது கணவன், மனைவி இருவரையும் காக்கும் சட்ட,மாகும். இந்த சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தால், பெண்களுக்கு முழு பாதுகாப்பும், அவர்கள் வீட்டில் வாழும் உரிமையும் கிடைக்க நீதிமன்றம் உதவும். மேலும் குடும்பத்தினருக்கு ஆலோசனை மையங்கள் மூலம் உதவியும் அளிக்கப்படும்.   

* ஜீரோ எஃப்.ஐ.ஆர் (Zero FIR)

பொதுவாக ஒரு புகாரை குற்றம் நடந்த இடத்தில், அந்த ஆட்சி எல்லைக்கு கீழ் இருக்கும் காவல் நிலையத்தில் தான் புகார் கொடுக்க வேண்டும். ஆனால் பெண்கள் துணிந்து வந்து புகார் கொடுப்பதே சவாலாக உள்ள இந்த காலக்கட்டத்தில், அவர்களை அங்கு செல், இங்கு செல் எனத் தட்டிக் கழிப்பது சரியல்ல. இதனை கருத்தில் கொண்டு, இந்த சட்டம் அமலுக்கு வந்தது. அதேபோல், சிறுவயதில் தங்களுக்கு எதிராக நடந்த குற்றத்தை வளர்ந்த பின் அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான புகார்களுக்கு நேர வரம்பு கிடையாது.

எவ்வளவு காலம் கழிந்த பின்னும் தங்கள் புகாரை முறையிடலாம். சூரிய உதயத்திற்கு முன்னும், சூரியன் மறைந்த பின்னும் காவல் நிலையம் கொண்டு செல்ல இயலாது. அதாவது மாலை ஆறு மணிக்கு மேல், காலை ஆறு மணிக்குள் எந்த சூழலிலும், பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியாது. இது, பெண் போலீசார் உடன் இருந்தாலும் முடியாது.

ஆனால், அவசர கால அடிப்படையில், ஒரு பெண் கடுமையான குற்றத்தை செய்திருக்கும் பட்சத்தில், நீதிபதியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்று இரவில் கைது செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல, வெறும் விசாரணைக்காக, பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லவும் தடையுள்ளது. விருப்பப்பட்டால் பெண்ணின் வீட்டில், குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன், பெண் காவல் அதிகாரியும் உடன் இருந்து விசாரித்து அறிக்கை பெறலாம்.

* வேலை செய்யும் இடங்களில் தொந்தரவு

பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும் மூன்று பேர் கொண்ட ஐசிசி (ICC - Internal Complaints Committee) புகார் கமிட்டி நிச்சயம் அமைக்கப்பட வேண்டும். இதில் 50% மேலாக பெண்களே இருக்க வேண்டும் எனவும் சட்டம் சொல்கிறது. மூன்றாம் நபர், நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத அங்கு பணியில் இல்லாதவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு முறை பெண்களுக்கு எதிராக வன்முறை நிகழும் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் தான் வேலையில் இருந்து நிற்பதும் அல்லது இடமாற்றம் பெற்று அந்த இடத்தை விட்டும் செல்கிறார்கள். ஆனால் இது நிரந்தர தீர்வாக இருக்காது. குற்றம் செய்த நபர் அதே இடத்தில் வசதியாக தான் இருக்கிறார். அடுத்து அந்த இடத்தில் வரும் இன்னொரு பெண்ணிற்கும் அதே நிலைதான். இதனால், ஐசிசி கமிட்டி புகாரை தீவிரமாக விசாரித்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு தக்க தண்டனை அளிக்க உதவும்.

* பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை பாதுகாத்தல்

பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்கள் மற்றும் சிறார்களின் அடையாளத்தை பாதுகாப்பது பத்திரிகையாளர்களின் கடமையாகும். பெயரை மாற்றி குறிப்பிட்டு செய்தி வெளியிடலாம். ஆனால் கண்டிப்பாக புகைப்படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட்டுக் காணொளி படுத்தக்கூடாது. இது, ஏற்கனவே நம் சமூகத்தால் பாதிப்படைந்திருக்கும் ஒருவரை மேலும் காயப்படுத்தாமல் உதவும். அதேபோல், பெண்கள் தங்கள் அறிக்கையை தனியாக நீதிபதி மற்றும் ஒரு பெண் காவலாளியுடனும் கேமரா முன் தெரிவிக்கலாம். நீதிமன்றத்திற்கு முகத்தை மறைத்தும் பர்தா அணிந்தும் வரலாம்.

* ஆண்களுக்கு நிகரான ஊதியம்

ஒரு பெண் தான் வேலை செய்யும் இடத்தில் தனக்கு நிகரான பதவியில் இருக்கும் ஆணுக்கு என்ன சம்பளமோ, அதே சம்பளத்தை உரிமையுடன் கேட்டு வாங்கலாம். அதே சமயம், சம வேலை, சம படிப்பிற்கு தான் சம ஊதியமும் எதிர்பார்க்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெண்கள் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு, காவல்நிலையத்திலும் நீதிமன்றத்திலும் கால் வைப்பதையே குற்றமாக எண்ணி பயந்தார்கள். அதனால் அனைத்து துன்பங்களையும் வலிகளையும் அனுபவித்த பின் சமாளிக்கவே முடியாத சூழலில் தன் வாழ்கையின் பெரும் பகுதியை இழந்த நிலையில் நீதி கேட்டு வருவதுண்டு.

ஆனால், இப்போது பெண்கள் தைரியமாக தங்களை பாதுகாத்துக்கொள்ள நீதிமன்ற வாசலுக்கு தலை நிமிர்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பொருளாதார ரீதியில் ஒரு பெண்ணிற்கு இருக்கும் சுதந்திரமும் கல்வி மற்றும் ஊடகங்களின் தாக்கமும் தான். இவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நீதிமன்றம் பல ஆலோசனை மையங்களை அமைத்தும், சலுகைகள் கொடுத்தும்  நீதி வழங்கி வருகிறது’’ என்றார் வழக்கறிஞர் விஜயலட்சுமி.

- ஸ்வேதா கண்ணன்

Related Stories: