மக்காச்சோளம் உற்பத்தி குறைவு-போடி விவசாயிகள் கவலை

போடி : போடி பகுதியில் கிணற்றுப் பாசனத்தில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. கிணற்றுப் பாசனம் மூலம் சுமார் ஒரு 6000 ஏக்கர் அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். போடி அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், தோப்புப்பட்டி, கோடங்கிபட்டி, பூதிப்புரம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறுமாதத்தில் பலனுக்கு வரும் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது.

பருவமழை தவறியதாலும், தாமதமாக பெய்த மழை காரணமாகவும் ஏக்கருக்கு 25 மூட்டை கள் கிடைக்க வேண்டிய மக்காச்சோளம் தற்போது 18 மூட்டைகளே கிடைக்கிறது. கடந்த காலங்களில் ஒரு குவிண்டால் 1900 ரூபாய் வரை விற்பனையானது.

 தற்போது மழையின் பாதிப்பால் குவிண்டால் 1250 ரூபாய் என விலை போகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அறுவடை செய்து வருகின்ற மக்காச்சோளத்தை சந்தைப்படுத்துதலின் போது வியாபாரிகள் விலை குறைத்து கேட்கின்றனர். விவசாயிகளும் களம் பகுதிகளில் மிஷின் மூலமாக மக்காச்சோளத்தை பிரித்து தரம் பிரித்து வருகின்றனர்.

விவசாயிகளுடன் தொழிலாளர்களும் பிரித்தெடுப்பதில் தீவிரமாக உள்ளனர்.இதுகுறித்து கோடாங்கிபட்டியைச் சேர்ந்த விவசாயி சுந்தர் கூறுகையில்,` தாமத மழையால் மக்காச்சோளம் உற்பத்தி குறைந்துள்ளது. விலையிலும் 650 ரூபாய் குறைவதால் நஷ்டத்தை சந்திக்கிறோம்’ என்று கூறினார்.

Related Stories:

>