மஞ்சூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த வழித்தடம் மீட்பு-வருவாய்துறை அதிரடி

மஞ்சூர் : மஞ்சூர் அருகே பல ஆண்டுகளாக ஆக்ரமிப்பில் இருந்த குதிரை வழித்தடத்தை குந்தா வருவாய்துறையினர் அதிரடியாக மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தா நீர் மின்நிலையத்தை ஒட்டி வனப்பகுதி வழியாக தங்காடு கிராமத்திற்கு பாதை வசதி இருந்துள்ளது. அதிகம் போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்தில் பொதுமக்கள் குதிரை மார்கமாகவும், நடந்து செல்லவும் இந்த பாதையையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக இந்த பாதையில் குதிரைகளின் பயன்பாடு அதிகளவில் இருந்துள்ளது. குந்தாவில் இருந்து தங்காடு வரை சுமார் 1.5 கி.மீ தூரம் கொண்ட இந்த குதிரை வழித்தடம் நாளடைவில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் போனது.

இந்நிலையில் இந்த பாதையின் இருபுறங்களிலும் தனியார் தேயிலை தோட்டங்கள் அமைந்திருந்ததால் பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டு தேயிலை தோட்டமாக மாறி போனது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இந்த குதிரை வழித்தடத்தை மீட்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் குந்தா வருவாய்துறை சார்பில் சம்மந்தப்பட்ட பகுதியில் நில அளவை மேற்கொள்ளப்பட்டு வழித்தடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குந்தா தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் துணை தாசில்தார் கனிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ், சவுந்திர பாண்டியன் மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பாதையை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் மகேஸ்வரி கூறுகையில்: பல ஆண்டுகாளாக ஆக்ரமிப்பில் இருந்த அரசுக்கு சொந்தமான இடம் தற்போது ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

Related Stories:

>