திறப்பு விழா நடத்தியும் பயனில்லை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்காததால் காட்சிப்பொருளான புதிய நேரு மார்க்கெட்-நடவடிக்கை எடுக்குமா காரைக்கால் நகராட்சி?

காரைக்கால் : காரைக்காலில் புதிய நேரு மார்க்கெட்டுக்கு திறப்பு நடத்தியும் பயனில்லை. வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்காததால் நேரு மார்க்கெட் பூட்டியே கிடக்கிறது. எனவே காரைக்கால் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்காலில் இயங்கி வரும் நேரு மார்க்கெட் பழம்பெருமை வாய்ந்தது. பழங்காலத்தில் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள், மீன்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி விடலாம். உள்ளூரில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் துவங்கி வெளியூர்களிலிருந்தும் பொருட்கள் வாங்கி வந்து நேரு மார்க்கெட்டில் விற்பனை செய்வது வழக்கம். இதனால் காரைக்காலில் உள்ள 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் திருவாரூர், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் இருந்தும் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் பயனடைந்து வந்தனர்.

நேரு மார்க்கெட் பழங்காலத்தில் கட்டப்பட்டதால் காலப்போக்கில் அதன் கட்டிடம் உறுதி தன்மையை இழந்து சிதிலமடைந்தது. இதனால் நேரு மார்க்கெட்டை புதுப்பித்து கட்டுவதற்கு புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. இதனால் அங்கிருந்த அனைத்து கடைகளும் தற்காலிகமாக நகர காவல் நிலையம் உள்ள வீதிக்கு மாற்றப்பட்டது. தற்போதும் அதே இடத்தில் தான் நேரு மார்க்கெட் இயங்கி வருகிறது. இதனிடையே பழைய இடத்தில் இருந்த நேரு மார்க்கெட் கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.12 கோடியில் அதே இடத்தில் பழமைமாறாமல் புதிய பொலிவுடன் கட்டப்பட்டது.

ஆனால் பழைய நேரு மார்க்கெட்டில் இருந்த கடைகளின் எண்ணிக்கையை விட குறைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியதால் கூடுதல் கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பழைய நேரு மார்க்கெட்டில் 118 கடைகள் இருந்த நிலையில் தற்போது கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டில் 126 கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த வியாபாரிக்கும் கடை ஒப்படைக்கவில்லை. ஒவ்வொரு வியாபாரியின் பெயரில் தான் மின் இணைப்பை கடைகளுக்கு கொடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சார வசதியும் அங்கில்லை. கடைகளும் குறுகியதாக அமைந்திருப்பதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் அவசர அவசரமாக விழா நடத்தப்பட்டு கடந்தாண்டு அக்டோபர் 16ம் தேதி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியால் புதிதாக கட்டப்பட்ட நேரு மார்க்கெட் திறக்கப்பட்டது. குறுகிய இடவசதி, கடைகளை பிரித்தளிப்பதில் குளறுபடி, அரசியல் குறுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டி முடித்து திறக்கப்பட்டும் கூட பயனில்லாமல் நேரு மார்க்கெட் இருக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் முகமதுபிலால் கூறும்போது,புதிதாக கட்டப்பட்டுள்ள நேரு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒப்படைக்காமல் இருப்பதற்கு அரசியல் விளையாட்டு தான் காரணம். பார்க்கிங் வசதியும் இல்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு 25 சதவீத கடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத கடைகள், கணவனை இழந்தவர் அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு 5 சதவீத கடைகளை பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் இதிலும் குளறுபடிகள் நிலவி வருவதால் யாருக்குமே கடையில்லை என்றாகி விட்டது என்றார்.

Related Stories:

>