வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 கிணறுகளில் குடிநீர் விநியோகம் தொடக்கம் -மாநகராட்சி கமிஷனர் தகவல்

நெல்லை :  நெல்லை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 30 குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நெல்லை மாநகராட்சிக்கு நீராதாரமாகத் திகழும் 15 தலைமை நீரேற்றும் நிலையங்களின் கீழுள்ள 48 நீர் உறிஞ்சும் கிணறுகள் மற்றும் மின்மோட்டார்கள் நீரில் மூழ்கி பழுதாகி சேதமடைந்தது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர்  விநியோகம் பாதிக்கப்பட்டது. மாற்று ஏற்பாடாக, மாநகராட்சி லாரிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

 கடந்த 3 நாட்களாக, வெள்ளம் குறைந்து வருவதால் நெல்லை கலெக்டர் விஷ்ணு வழிகாட்டுதலின்படி, நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர் தலைமையில் பொறியாளர்கள் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கமிஷனர் கண்ணன் கூறியிருப்பதாவது: வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த மொத்தமுள்ள 48 நீர் உறிஞ்சும் கிணறுகளில் இதுவரை தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தின் கீழுள்ள 6 நீர் உறிஞ்சும் கிணறுகளில், 3 கிணறுகள் பணிகள் முடிக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள, 3 நீர் உறிஞ்சும் கிணறுகள் ஆழமான பகுதியில் அமைந்துள்ளதாலும், வெள்ளத்தின் அளவு குறையாததாலும் படிப்படியாகப் பணிகள் நடந்து வருகிறது.

குறுக்குத்துறை தலைமை நீரேற்றும் நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் அனைத்தும் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது. நெல்லை மண்டலத்திற்குட்பட்ட கொண்டாநகரம், பாளை. மண்டலத்திற்குட்ட தீப்பாச்சி அம்மன் கோயில் ஒரு குடிநீர் திட்டம் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது.

திருமலைக்கொழுந்துபுரம் திட்டத்தின் கீழ், கேடிசி நகர் திட்டத்தில் 2 கிணறுகள் சீரமைத்து குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

மொத்தம், 48 நீர் உறிஞ்சும் கிணறுகளில் இதுவரை 30 கிணறுகளுக்கான பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 நீர் உறிஞ்சும் கிணறுகளின் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

ஆற்றில் படிப்படியாக நீர் வரத்து குறைந்து வருவதால் முழுமையாக குடிநீர் விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும். லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கமிஷனர் தெரிவித்துள்ளார்.

நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் 36 குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தன

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்வது தாமிரபரணி ஆறு. இந்த 4 மாவட்டங்களுக்கும் மொத்தம் 65 குடிநீர் திட்டங்கள் தாமிரபரணி ஆற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் 46 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்  முழுமையாக  பாதிப்படைந்தது.

இதைத்   தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்   சி.என்.மகேஸ்வரன் உத்தரவின்படி, 20 பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக்   குழுக்கள்  தாமிரபரணி ஆற்றுப் படுகையில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு,   புனரமைப்பு செய்திட களம் இறக்கப்பட்டனர். இதற்காக கடலூர், கோவை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு 120 ெபாறியாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 6 நாட்களாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் 2 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வீதம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இதில் நேற்றைய நிலவரப்படி, 36 குடிநீர் திட்டங்களில் பராமரிப்பு பணிகள், புனரமைப்பு பணிகள் முடிந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் 9 குடிநீர் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: