ஓசூர் அருகே வனப்பகுதியில் 5 குழுக்களாக பிரிந்து 50 யானைகள் முகாம்-கிராம மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர் : ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட  யானைகள் 5 குழுக்களாக முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி  வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த ஒரு வாரமாக சானமாவு வனப்பகுதியையொட்டிய பகுதியில் சுற்றித்திரிந்தன.

இதையடுத்து, வனத்துறையினர் அந்த யானைகளை பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். அப்போது, இரண்டு குழுக்களாக ஓட்டம் பிடித்த யானைகள், பின்னர் 5 குழுக்களாக பிரிந்து, சானமாவு அருகே உள்ள ஓடை பகுதியில் தஞ்சமடைந்தன. அங்கிருந்து யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘அனைத்து யானைகளும் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து, சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், உணவு தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் உணவு தேடி யானைகள் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பகல் நேரங்களில் விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டும். வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நடமாட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,’ என்றனர்.

Related Stories:

>